Thursday, February 5, 2009
குஜராத் படுகொலைகள் - அமைச்சர் தலைமறைவு
குஜராத் படுகொலைகள் சம்பவத்தில் அம்மாநில அமைச்சர் ஒருவருக்கும் வி.எச்.பி. தலைவர் ஒருவருக்கும் முக்கியப் பங்கு உண்டு என்றும் இருவரும் தலைமறைவுக் குற்றவாளிகளாகக் கருதப்படுவதாகவும் இந்த வழக்கை விசாரிக்கும் சிறப்பு புலனாய்வுக் குழு தெரிவித்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலம், அயோத்தியிலிருந்து கடந்த 2002ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி, சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்தபோது, கோத்ரா ரயில் நிலையத்தின் அருகில் எஸ்6 என்ற எண்ணுள்ள ரயில் பெட்டியில் ஏற்பட்ட தீவிபத்தின் காரணமாக அதில் பயணம் செய்த 57 கரசேவகர்கள் கொல்லப் பட்டனர். அந்தச் சம்பவம் திட்டமிட்டு நடத்தப்பட்டதாக பா.ஜ.க தெரிவித்தது. ஆனால், அது தற்செயலாக நடந்த விபத்துதான் என சில அரசியல் கட்சிகள் தெரிவித்தன.
அந்த விபத்து நடந்த உடனேயே குஜராத் முதல்வர் மோடி, கோத்ரா வந்தடைந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சில முக்கியமான ஆதாரங்களை அழித்ததாக 'ஜனசங்கர்ச் மஞ்ச்' என்ற அமைப்பின் வழக்கறிஞரான முகுள் சின்ஹா குற்றம் சாட்டியிருந்தார்.
கோத்ரா தீவிபத்தை அடுத்து முஸ்லிம்கள் மீது குற்றம் சாட்டி, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி ஆடிய நர வெறியாட்டத்தை குமுதம், தமிழரங்கம் போன்ற ஊடகங்கள் ஓரளவுக்கு வெளிக் கொண்டு வந்தன. ஆனால், குஜராத் முஸ்லிம்கள் மீது மோடியும் அவரது சங் பரிவாரங்களும் திட்டமிட்டு நடத்திய அராஜகத்தைச் சான்றுகளோடு முழுமையாக வெளிக்கொண்டு வந்த பெருமை டெஹல்கா.காம் தளத்தையே சேரும்.
இந்நிலையில், கோத்ரா வழக்கை மீண்டும் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்வதற்காக, சுப்ரீம் கோர்ட் ஒரு சிறப்புப் புலனாய்வுக் குழுவைக் கடந்த 2008 மார்ச் மாதம் நியமித்தது. இக்குழுவின் தலைவராக ராகவன் நியமிக்கப்பட்டார். இதில், உ.பி. முன்னாள் டி.ஜி.பி. சத்பதி, ஐ.பி.எஸ், அதிகாரிகள் கீதா ஜோரி, சிவானந்ஜா மற்றும் ஆஷிஷ் பாட்டியா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். கோத்ரா ரயில் விபத்துச் சம்பவத்தையும் அது தொடர்புடைய ஒன்பது வழக்குகளையும் விசாரித்து வரும் இக்குழுவினர், எதிர்வரும் 15ஆம் தேதிக்குள் தங்களது இறுதி அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என சுப்ரீம் கோர்ட் கெடு விதித்தது.
இந்த வழக்கை மறு விசாரணை செய்த சிறப்புப் புலனாய்வுக் குழு, கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தில் குஜராத் மாநிலப் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சர் மாயா கோத்னானிக்கும் வி.எச்.பி. தலைவர் ஜெயதீப் பட்டேலுக்கும் முக்கியப் பங்கு உண்டு என தெரிவித்துள்ளது.
இது குறித்துச் சிறப்பு புலனாய்வுக் குழுவின் தலைவர் ராகவன் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியின் போது, "கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து நரோடா பாட்டியாவில் நடந்த கொலை வழக்கில் மாயா கோத்னானி மற்றும் ஜெயதீப் படேல் ஆகியோருக்குத் தொடர்பு உள்ளது. இது தொடர்பாக இருவருக்கும் சிறப்புப் புலனாய்வுக் குழு முன்பாக ஆஜராகும்படி பலமுறை சம்மன் அனுப்பியும் அவ்விருவரும் ஆஜராகவில்லை. நாங்கள் அனுப்பிய நோட்டீசுக்கும் அவர்கள் பதில் அளிக்க வில்லை. எனவே அவர்கள் இருவரையும் தலைமறைவுக் குற்றவாளிகளாக அறிவிக்கிறோம்" என்று அவர் தெரிவித்தார்.
உண்மைகள் உறக்கம் கலைந்து எழ வேண்டும்; குற்றவாளிகள் சட்டத்தின் முன் இழுத்து வரப்பட்டு தண்டிக்கப் படவேண்டும்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment