Saturday, February 21, 2009

பொறுப்பை மறந்த மக்கள் பிரதிநிதிகள்[?]

நமது ஜனாயக நாட்டில் மக்கள் தத்தமது கோரிக்கைகளை சட்டமியற்றும் அவைகளில் எடுத்தியம்புவதற்காக, பாராளுமன்றத்திற்கு/ சட்டமன்றத்திற்கு பிரதிநிதிகளை தேர்ந்தெடுத்து அனுப்புகிறார்கள். இவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு அரசு, ஊதியம்- மானியம்- சலுகைகள் என்று மக்களின் வரிப்பணத்திலிருந்து வழங்குகிறது. மக்களின் வரிப்பணத்திலிருந்து தங்களை வளப்படுத்திக்கொண்ட சில பிரதிநிதிகள் மக்களை மறந்து, தாம் அங்கம் வகிக்கும் அவையின் கண்ணியத்தை மறந்து அவையை கலவரகாடாக்கி அவையை நடக்கவிடாமல் செய்து அவையின் மாண்பை குலைப்பதை பார்க்கிறோம்.
சமீபத்தில் உ.பி., ஆந்திரா மற்றும் ஒரிஸ்ஸாவில் சட்டமன்றத்தில் நடந்த கலவரத்தை உதாரணமாக கூறலாம். அவ்வளவு ஏன்? நம்முடைய தமிழகத்தில், எதிர்கட்சியினர் ஏதேனும் ஒரு காரணத்தை சொல்லி வெளியேறுகிறார்கள். அல்லது வெளியேற்றப்படுகிறார்கள். இலங்கை தமிழர் பிரச்சினையில் தொடர்ந்து எதிர்கட்சியினரின் வெளிநடப்பு தொடர்கிறது. இலங்கை தமிழர்மீது கொண்டுள்ள அக்கறை பாராட்டத்தக்கதே! ஆனால் உங்களை நம்பி தேர்ந்தெடுத்து அனுப்பிய மக்கள் பிரச்சினையை புறந்தள்ளி, 'வெளிநடப்பு' என்ற கொள்கையை கடை பிடிப்பது நியாயமா?


மேலும், அரசு தவறு செய்யும்போது சரியான முறையில் வாதங்களை எடுத்துவைத்து வாதாடவேண்டிய பொறுப்புள்ள எதிர்கட்சித்தலைவர் ஜெயலலிதா சட்டமன்றத்துக்கு 'கையெழுத்து' போட மட்டுமே செல்கிறார் எனில், இவர்களை தேர்ந்தெடுத்த மக்கள்தான் பரிதாபத்திற்குரியவர்கள்.


மேலும், நாட்டின் தலைவிதியை தீர்மானிக்கக்கூடிய பாராளுமன்றத்தில் ஏதேனும் பிரச்ச்சினைகளை எழுப்பி அவையை ஸ்தம்பிக்க செய்வதிலேயே சில உறுப்பினர்கள் குறியாக உள்ளனர். இரு நாட்களாக இலங்கை பிரச்சினையை மையமாக வைத்து, ம.தி.மு.க., பா.ம. க. எம்பிக்கள் கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். வேறு சில கட்சிகள் வேறு பிரச்சினைகளை எழுப்பியதை தொடர்ந்து அவையை நடத்தமுடியாத நிலைக்கு தள்ளப்பட்ட சபாநாயகர் திரு. சோம்நாத் சட்டர்ஜி கடும் கோபத்துடன்,


உங்களின் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது. இப்படியே போனால் அவையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கவேண்டிய நிலை வரும். அவை நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக உங்களுக்கு 'அலவன்ஸ்' தருவது மக்களின் வரிப்பணத்தை வீணடிப்பதாகும் என்று கூறியுள்ளார்.

சட்டர்ஜி அவர்களின் கூற்று நிதர்சனமான உண்மையாகும். கோடிகளை செலவு செய்து நடத்தப்படும் அவை நடவடிக்கைகளுக்கு குந்தகம் விளைவிக்கும் உறுப்பினர்களுக்கு அந்த மாத சம்பளம் உள்ளிட்ட அத்துணை சலுகைகளையும் ரத்து செய்தால்தான் கொஞ்சமேனும் திருந்துவார்கள். இவை எல்லாவற்றிற்கும் மேலாக வாக்களிக்கும் மக்கள், தேர்தல் நேரத்தில் வாக்கு கேட்டுவரும் இவர்களிடம் கடந்த பதவிகாலத்தில் அவை நடந்த நாட்கள் எத்தனை, அதில் இவர்கள் கலந்துகொண்ட நாட்கள் எத்தனை,தொகுதி நலன்பற்றி அவையில் இவர்கள் எழுப்பிய பிரச்சினைகள் என்ன? அவையில் இவர்களின் தனிப்பட்ட நடவடிக்கை என்ன? என்பதையெல்லாம் கேட்டு பரிசீலித்து வாக்களிக்கவேண்டும். இல்லையேல், ஒன்று ஓய்வெடுப்பார்கள்; அல்லது ஒன்றுக்கும் உதவாமல் வெளிநடப்பு செய்வார்கள் அல்லது சபையை நடக்கவிடாமல் செய்வார்கள். மக்கள் விழித்து கொண்டால் சரி!

No comments: