Monday, January 4, 2010

இனவெறித் தாக்குதல்: ஆஸ்திரேலியாவில் இந்தியர் படுகொலை

மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவில் 21 வயது இந்திய வாலிபர் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் கொடூரமாக குத்திக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலியாவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக, இந்திய மாணவர்கள் மீது இனவெறித் தாக்குதல்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இதுவரை சுமார் 1400 தாக்குதல் சம்பவங்கள் நடந்துள்ளன.

இந்நிலையில், இந்தியர்கள் மீதான தாக்குதலில் முதல் முறையாக வாலிபர் ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார். இது ஆஸ்திரேலியாவில் உள்ள இந்தியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர் நிதின் கார்க் (21). இவர் ஆஸ்திரேலியாவில் நிரந்தர குடியுரிமை பெற்றிருந்தார். மெல்போர்னில் உள்ள உணவகம் ஒன்றில் பார்ட்-டைம் வேலை பார்த்து வந்தார்.

ஆஸ்திரேலிய நேரப்படி நேற்று இரவு 10 மணிக்கு சோமர்வில்லி சாலை- கீலாங் சாலை சந்திப்பில் தான் வேலை பார்க்கும் உணவகத்துக்கு வரும் வழியில் ஒரு பூங்கா அருகே மர்ம நபர்களால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார்.

மேலும் வயிற்றுப்பகுதியில் குத்தப்பட்டு ரத்த வெள்ளத்துடன் ஒடி வந்துள்ளார். ரத்த காயங்களுடன் சத்தம் போட்டுக்கொண்டே தட்டுத்தடுமாறி உணவகத்துக்கு சேர்ந்த அவரை ஊழியர்கள் ராயல் மெல்போர்ன் மருத்துவமனையில் சேர்த்தனர்.

ஆனால் இந்திய நேரப்படி இன்று அதிகாலை 3.30 மணிக்கு சிகிச்சை பலனின்றி நிதின் உயிரிழந்தார்.

நேற்று இரவு ஒன்பது மணிக்கு நியூபோர்ட்டில் இருந்து யரவில்லி ரயில் நிலையத்துக்கு நிதின் பயணம் செய்ததாக போலீசார் தெரிவித்தனர். ஆஸ்திரேலியாவில் இந்திய வாலிபர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

No comments: