Monday, January 18, 2010

முஸ்லிம் மூதாட்டியை அடக்க விடாமல் மையவாடியை அபகரிக்கும் அதிகாரிகள்!





விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே 208 கொல்லம் திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பேரூராட்சி சேத்தூர். இங்கு 8 வருடங்களுக் முன்பு இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட சுலைமான் என்ற ஏசைய்யா, அப்துல்லா என்ற ஜெபமணி, இவர்களின் தாயார் மரியம் என்ற ஞானவடிவம்மாள் ஆகியோரும் இன்னும் டாக்டர் கரீமுல்லா, முதியவர் முகம்மது இபுறாஹிம் என்ற கோபால கிருஷ்ண தேவர் போன்றோர் இவ்வூரில் முஸ்லிம்களாக வாழ்ந்து வருகின்றனர்.

சேத்தூரில் முஸ்லிம்களுக்கான பொதுமையவாடி தேசிய நெடுஞ்சாலையில் காலம் காலமாக இருந்துவருகிறது. ஆனால் அது பராமரிப்பில்லாமல் இருக்கின்றது. இவ்வூரில் முஸ்லிம்களாக வாழ்ந்து வரக்கூடிய மேற்கண்ட சகோதரர்கள் அதனை சீர் செய்து, அளந்து எல்கைகளை வரையறுத்துத் தரும்படி பலமுறை மாவட்ட ஆட்சித்தலைவர் (அப்போதிருந்த ஜவஹர்) மனுச்செய்துள்ளனர். இதன் விளைவாக இறுதியாக கடந்த 16. 02. 2007 அன்று சேத்தூரின் அப்போதைய கிராம நிர்வாக அதிகாரி இந்த இடம் சம்பந்தமாக ஒரு அறிக்கையை வட்டாட்சியருக்கும் மாவட்ட ஆட்சித் தலைவருக்கும் அனுப்பியுள்ளார். அதில் புல எண் : 348/1 விஸ்தீரணம் 0.18.0 ஏர்ஸ் அரசுக்குச் சொந்தமான பொதுமயானம் என்றும் இது முஸ்லிம்களின் பயன்பாட்டில் உள்ளது என்றும் மேலும் புல எண் : 327/1, விஸ்தீரணம் 0.16.0 ஏர்ஸ் புறம்போக்கில் கோவில், பள்ளிவாசல், மந்த வெளி என தாக்கலாகி உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார். புல எண் 327/1 ல் உள்ள பள்ளிவாசலுக்காக வேண்டி உள்ள பொது மையவாடிதான் 348/1 ஆகும். இந்நிலையில் இங்கு கடந்த 7.01. 2010 அன்று மூதாட்டி மரியம் மரணமாகிவிட்டார். இவரை மேற்கண்ட முஸ்லிம்களின் மையவாடியில் அடக்கம் செய்ய ஏற்பாடு செய்தபோது காவல்துறையும், வருவாய்துறையும் சேர்ந்து கொண்டு இந்த இடம் அரசுக்குச் சொந்தமான புறம்போக்கு. இங்கு அடக்கம் செய்யக் கூடாது என தடைவிதித்தனர். உடனே மரியம் அவர்களின் மகன்களான அப்துல்லா , சுலைமான் ஆகியோர் இராஜபாளையம் தவ்ஹீத் ஜமாஅத்தை தொடர்பு கொண்டு நிலைமையை எடுத்துக் கூறினர் விருது நகர் மாவட்டத் தலைவர் அக்பர் அலி தலைமையில் இராஜபாளையம் கிளை நிர்வாகிகள் சேத்தூர் காவல் துறை ஆய்வாளரைச் சந்தித்து இது இஸ்லாமியர்களுக்குச் சொந்தமான மையவாடி. இங்குதான் அடக்கம் செய்வோம் என்றனர்.

காவல் துறை மற்றும் வருவாய் துறையின் சதி

இதற்கிடையில் வருவாய் துறையும், காவல் துறையும் சேர்ந்து கொண்டு மையாவாடிக்கு அருகில் இருக்கும் நாடார் சமுதாயத்தைச் சார்ந்தவர்களையும், மரியம் அவர்களின் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளாத மற்ற பிள்ளைகளையும் தூண்டிவிட்டு நாங்கள் மரியம் என்ற எங்கள் தாயைகிறிஸ்தவ கல்லறையில்தான் அடக்கம் செய்வோம் எனக் கூறுமாறு செய்து சட்டம் ஒழுங்கு பிரச்சினையாக ஆக்கி முஸ்லிம்களுக்கு சொந்தமான மையவாடியில் அடக்கம் செய்ய விடாமல் தடைசெய்தனர். மரியம் அவர்கள் முஸ்லிமாக வாழ்ந்தாலும் அரசாங்கப் பதிவேட்டில் அவருடைய பெயர் ஞான வடிவம்மாள் கிறிஸ்டின் என்றே உள்ளது. இதனைக் காரணம் காட்டி இந்த பிரேதத்தை கிறிஸ்வத கல்லறையில்தான் அடக்க வேண்டும் என்று காவல்துறையும் கூறியது. இறுதியில் முஸ்லிம்களுக்கு சொந்தமான மையவாடியில் அடக்கம் செய்யவிடாமல் தடுக்க வேண்டும் என்ற நோக்கத்தை நிறைவேற்றினர். இந்நிலையில் காவல் துறை மற்றும் வருவாய் துறையின் சதியினால் பிரச்சினை திசைமாறுவதைக் கண்ட இறந்த மூதாட்டியின் இரண்டு மகன்களும் தவ்ஹீத் சகோதரர்களை தொடர்பு கொண்டு இராஜபாளையம் முஸ்லிம் மையவாடியில் அடக்கம் செய்ய முன்வந்தனர். சேத்தூரிலிருந்து 12 கிமீ தொலைவிலுள்ள இராஜபாளையம் முஸ்லிம் மையவாடியில் இஸ்லாமிய முறைப்படி நல்லடக்கம் செய்யப்பட்டது.

அமைதிப் பேச்சு வார்த்தை

பின்னர் வருவாய் வட்டாட்சியர் தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகளை அழைத்து வருகின்ற 11. 01. 2010 திங்கள் கிழமை மாலை 4 மணியளவில் இராஜபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து பிரச்சினைக்குரிய இடம் சம்பந்தமாக உங்கள் தரப்பில் ஐந்து நபர்களும் எதிர்தரப்பில் ஐந்து நபர்களுமாக சமாதானக் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார். நமது தரப்பில் மேலாண்மைக் குழு உறுப்பினர் ஸைஃபுல்லாஹ், விருது நகர் மாவட்டத் தலைவர் அக்பர் அலி, துணைத்தலைவர் ஜான் பாஷா , நெல்லை மாவட்ட அரசு நலத்திட்ட செயலாளர் குறிச்சி சுலைமான், டைகர் சம்சுதீன், டாக்டர் கரீமுல்லாஹ் ஆகியோர் பெயர் கொடுக்கப்பட்டு வட்டாட்சியர் காளிமுத்து தலைமையில் காவல் ஆய்வாளர் ஜெயக்குமார், வருவாய் ஆய்வாளர் பாலமுருகன், கிராம நிர்வாக அதிகாரி துரைராஜ் ஆகியோர் முன்னிலையில் பேச்சுவார்த்தை ஆரம்பமானது.

அரசுத் தரப்பு : எதற்கு நீங்கள் வந்துள்ளீர்கள்.
ஸைஃபுல்லாஹ் : எதற்கு எங்களை அழைத்தீர்கள்.
அரசுத்தரப்பு : அரசுக்கு சொந்தமான இடத்தை மையவாடியாக பயன்படுத்தக்கூடாது.
ஸைஃபுல்லாஹ் : இதை காலம் காலமாக முஸ்லிம்கள் மையவாடியாக பயன்படுத்தியுள்ளனர். அதற்கான ஆதாரமாக இதுவரை மூன்று முஸ்லிம் கப்ருகள் (புதைகுழிகள்) அங்கு இருந்து வருகின்றன. இன்னும் 500 பேருக்கு மேல் அங்கு அடக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
அரசுத் தரப்பு : இது முஸ்லிம்களின் புதை குழிதான் என்பதற்கான ஆதாரம் என்ன?
ஸைஃபுல்லாஹ் : அது முஸ்லிம்களுக்குரியதில்லை என்பதற்கான ஆதாரத்தை நீங்கள் தாருங்கள் என்றார்.மேலும் அவர் கூறுகையில் இறுதியாக கடந்த 2007 ஆம் ஆண்டு சேத்தூர் கிராம நிர்வாக அதிகாரி இந்த இடம் சம்பந்தமாக ஒரு அறிக்கையை வட்டாட்சியருக்கும் மாவட்ட ஆட்சித் தலைவருக்கும் அனுப்பியுள்ளார். புல எண் : 348/1 விஸ்தீரணம் 0.18.0 ஏர்ஸ் அரசுக்குச் சொந்தமான பொதுமயானம் என்றும் இது முஸ்லிம்களின் பயன்பாட்டில் உள்ளது என்ற அறிக்கை நகலை ஸைஃபுல்லாஹ் அவர்கள் காண்பித்தார். அதைப் பெற்றுக் கொண்ட வட்டாட்சியர் காளிமுத்து அந்த அதிகாரி கொடுத்த அறிக்கையையெல்லாம் ஏற்றுக் கொள்ள முடியாது என்று கூறிவிட்டார். உடனே டைகர் சம்சுதீன் என்பவர் அரசு ஆவணத்தில் முஸ்லிம்களுக்குச் சொந்தமான மையவாடி என்று உள்ளது எனக் குறிப்பிட்டார். உடனே அரசு ஆவணத்தை வட்டாட்சியர் எடுத்துக் காண்பித்தபோது அதில் திருத்தம் செய்திருப்பதைப் பார்த்து சம்சுதீன் அதிர்ச்சி அடைந்தார்.

இறுதியாக இந்த இடம் முஸ்லிம்களின் மையவாடிதான் என்பதற்கு மேலும் வலுவான ஆதாரங்களைக் கொடுக்கும் வரை அந்த இடத்தை யாரும் பயன்படுத்தக் கூடாது என்று கூறி கூட்டத்தை முடித்தார். எதிர் தரப்பில் உள்ளவர்கள் இறுதிவரை வாய்திறக்காமல் இருந்ததைப் பார்க்கும் போது தாசில்தார் மட்டுமே எதிர்தரப்புக்கு வக்கீலாகவும் பின்னர் அவரே நீதிபதியாகவும் இருந்து இந்த இடம் அரசுக்குச் சொந்தமான புறம்போக்கு என்று கூறி ஒரு தலைப்பட்சமாக நடந்து கொண்டது ஜமாஅத்தார்களுக்கு வேதனையாக இருந்தது.

சேத்தூர் கிராமம்…

இங்கு நானுறு ஆண்டுகளாக இஸ்லாமியர்கள் வாழ்ந்து வந்தனர். சில ஆண்டுகளுக்கு முன்னர் தேவர் சமுதாயத்திற்கும் முஸ்லிம்களுக்கும் ஏற்பட்ட கலவரத்தால் முஸ்லிம்கள் அங்கு வாழ முடியாமல் பலர் தங்கள் சொத்துகளை அப்படியே விட்டுவிட்டும். சிலர் கேட்ட விலைக்கே வீடுகளையும் விளைநிலங்களையும் விற்பனை செய்து விட்டும், அருகிலுள்ள இராஜபாளையம் சிரிவில்லி புத்தூர்,சம்பந்த புரம், ஜீவா நகர் ஆகிய இடங்களுக்கு குடிபெயர்ந்து விட்டனர். கோபால கிருஷ்ண தேவராக இருந்து தற்போது இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட சமூக சேவகர் பெரியவர் முகம்மது இபுறாஹிம் (75), டாக்டர் கரீமுல்லா ஆகியோர் கடந்த ஐந்து ஆண்டுகளாக முஸ்லிம்களுக்குச் சொந்தமான மையவாடியை அதன் அருகே உள்ளவர்கள் ஆக்கிரமிப்பு செய்வதை தடுக்க வேண்டும் என்று முதல்வரின் தனிப்பிரிவிற்கும் மாவட்ட ஆட்சித் தலைவருக்கும் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் இரண்டாயிரமாவது ஆண்டில் அரசு இந்த இடத்தில் ஆரம்ப சுகாதர நிலையம் கட்டுவதற்கு ஏற்பாடு செய்தது. அதன் பின்னர் 2007ம் ஆண்டு கிராம நிர்வாக அதிகாரி இது முஸ்லிம்களின் பயன்பாட்டிலுள்ள மாயனம் என்று அறிக்கை தாக்கல் செய்தார். இந்த இடத்தை முஸ்லிம்களிடம் ஒப்படைக்காவிட்டால் தென்மாவட்ட இஸ்லாமியர்களை அழைத்து தவ்ஹீத் ஜமாஅத் தலைமையில் மையவாடியை மீட்கும் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்று மேலாண்மைக் குழு உறுப்பினர் ஸைஃபுல்லா தெரிவித்தார்.

Source: tntj

No comments: