Monday, January 4, 2010

குப்பையில் வீசப்பட்ட கர்கரேயின் குண்டுதுளைக்காத சட்டை!

பயங்கரவாதத்தின் கோரமுகத்தை வெளிச்சம் போட்டுக் காட்டிய மகாராஷ்ட்ரா மாநில பயங்கரவாத தடுப்புப்படைத் தலைவர் மறைந்த ஹேமந்த் கர்கரேயின் தியாகத்தை கொச்சைப்படுத்தும் விதமாக மற்றொரு அவமானம் நிகழ்ந்துள்ளது. கர்கரேயின் குண்டுதுளைக்காத சட்டை குப்பைக் கிடங்கில் வீசப்பட்டதாக அதிர்ச்சிகர தகவல்கள் கிடைத்துள்ளன.


கர்கரே பயங்கரவாதத்திற்கு பலி­யான மறுநாள் 2008 நவம்பர் 27 ஆம் நாள் அவரது உடனி­­ருந்த குண்டுதுளைக்காத சட்டையை குப்பை போடும் பையில் வைத்து குப்பைக்கிடங்கில் வீசிவிட்டதாக கர்கரேயின் உடலை போஸ்ட்மார்டம் செய்த மும்பை ஜே.ஜே. மருத்துவமனையின் துப்புரவு பணியாளர் நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறார்.

காந்தியைக் கொன்ற பயங்கரவாதிகள். பாப்ரி மஸ்ஜிதைத் தகர்த்த பாதகர்கள் நாட்டில் எந்த பயங்கரவாதச் செயல்கள் நடந்தாலும் சிறுபான்மை சமூக இளைஞர்களின் மீது பழிபோட்டு களங்கம் சுமத்துவதை வாடிக்கையாகக் கொண்டிருந்த நிலையில் சங்பயங்கரவாதத்தின் கோர முகத்தை தோலுரித்தார் மாவீரன் கர்கரே.

மாலேகான் குண்டுவெடிப்பில் தொடர்புடைய பயங்கரவாதிகள் அனைவரும் சங்பரிவாரைச் சேர்ந்தவர்கள் என்ற உண்மையை உலகுக்கு உணர்த்தினார் கர்கரே.

அதனைத் தொடர்ந்து கடமை வீரர் கர்கரேக்கு மிரட்டல் அதிகரித்தது. மோடி உள்பட சங்முக்கிய பிரமுகர்கள் மிரட்டியதாக தகவல்கள் வெளிவந்தன.

2008 நவம்பர் 20 ஆம் நாள் மும்பை நகரம் பயங்கரவாத முற்றுகைக்கு இலக்கான போது கர்கரே மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டார்.

கர்கரேயின் மர்ம படுகொலை குறித்து உரிய நீதி விசாரணை தேவை என பல்வேறு உரிமை அமைப்புகள் கோரிக்கை விடுத்த போதிலும் மராட்டிய சிங்கம் அப்துற் ரஹ்மான் அந்துலேயின் நாடாளுமன்ற கர்ஜனையும் கர்கரேயின் மனைவியார் கவிதா கர்கரேயின் போர்க் கோலம் எதிரிகளை திகைக்க வைத்தது. ஹேமந்த் கர்கரே குண்டு துளைக்காத உடை அணிந்திருந்தும் அவரது உடலை குண்டுகள் துளைத்தது எப்படி? அந்த உடை இப்போது எங்கே இருக்கிறது? எனக் கேட்டு கர்கரேயின் மனைவி நீதிமன்றத் தில் வழக்கு தொடர்ந்தார். தகவல் அறியும் உரிமை சட்டத்தின்படியும் வினா எழுப்பப்பட்டது.

குண்டுதுளைக்காத கவச ஆடை குறித்த விஷயத்தில் மகராஷ்ட்ர அரசின் அலட்சியம் குறித்து கொதிப்படைந்த நீதிமன்றம் மகராஷ்ட்ரா முதல்வர் அசோக் சவானின் பிரத்யேக பாதுகாப்பை உடனடியாக நீக்குங்கள். அவருக்கு கர்கரேக்கு அணிவிக்கப்பட்ட குண்டுதுளைக்காத ஆடையை அணிவியுங்கள் என கோபமாக குறிப்பிட்டார்.

கர்கரேயின் குண்டுதுளைக்காத சட்டை தொடர்பான கேள்விகள் இறுகத் தொடங்கியதைத் தொடர்ந்து. மும்பை ஜேஜே மருத்துவமனையின் துப்புரவுப் பணியாளர் குண்டு துளைக்காத ஆடையை மறுநாளே மருத்துவமனை குப்பைக்கிடங்கில் போட்டு விட்டதாக அவரது பதிவு செய்யப்பட்ட நீதி மன்ற வாக்கு மூலம் குறிப்பிடுகிறது.

கர்கரேயின் குண்டுதுளைக்காத உடை காணாமல் போயிற்று என மும்பை போ­லீஸ் முதன் முத­ல் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

இது ஒரு கண்துடைப்பான பதில் இவ்வளவு காலம் இல்லாத துப்புரவு பணியாளர் மற்றும் அவரது வாக்கு மூலம் திடீரென தோன்றியது. எப்படி என கேள்வி எழுப்புகிறார் ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரியான ஒய்.டி.சிங் இவர் கர்கரேயின் குண்டுதுளைக்காத ஆடை என்னவாயிற்று? என தகவல் அறியும் உரிமை சட்டத்தின் படி கோரிக்கை எழுப்பியவர்.

சங்பரிவார் சதிகளை அமல்படுத்திய ஒரு கடமை தவறான காவல் அதிகாரிக்கு மேலும் மேலும் அவமானம் தொடர்வது தான் இந்நாட்டின் நீதியா?

கவிதா கர்கரேயின் கண்ணீருக்கும், நாட்டிலுள்ள கோடிக்கணக்கான நீதி நாடுவோரின் ஆதங்கத்திற்கும் பதில் கிடைப்பது எப்போது?

No comments: