Tuesday, January 12, 2010

சென்னையில் ஓடும் ரெயிலில் தீ: பயணிகள் ஓட்டம்

ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரெயிலில் இன்று காலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் பயணிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

ராமேஸ்வரத்திலிருந்து சென்னை வந்த ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் இன்று காலை தாம்பரம் ரெயில் நிலையத்திற்கு வந்தது.அங்கு பயணிகளை இறக்கிய பின்னர் மீண்டும் ரெயில் எழும்பூர் நோக்கி புறப்பட்டது.ரெயில் புறப்படும் போது எஞ்சின் பகுதியிலிருந்து 6வது ஏசி பெட்டிக்கும், 7வதாக இருந்த இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட பெட்டிக்கும் இடையே புகை வந்ததோடு தீப்பிடித்தும் எரிந்தது.

இதனை பிளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்த பயணிகளும், ரெயில்வே ஊழியர்களும் பார்த்ததோடு உடனடியாக இத்தகவலை ரெயில்வே அதிகாரிகளுக்கு தெரிவித் தனர். ரெயில்வே அதிகாரிகள் வயர்லெஸ் மூலம் ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரெயில் எஞ்சின் டிரைவரை தொடர்பு கொண்டு இத்தகவலை தெரிவித்ததோடு உடனடியாக ரெயிலை நிறுத்தும்படி கூறினார். இதை யடுத்து ரெயில் தாம்பரம் ரெயில் நிலையத்திற்கும், சான டோரியம் ரெயில் நிலையத் திற்கும் இடையே நிறுத்தப்பட்டது.

ரெயில் நின்றவுடன் 7வது பெட்டியில் இருந்த பயணிகள் புகை வருவதை கண்டு அலறியடித்துக் கொண்டு ரெயிலை விட்டு கீழே இறங்கினர். அத்துடன் 6வது ஏசி பெட்டியில் இருந்த பயணிகளையும் கீழே இறங்கும்படி கூறியதை அடுத்து அப்பெட்டியில் உள்ள பயணிகளும் அலறியடித்துக் கொண்டு கீழே இறங்கினார்கள்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரெயில்வே ஊழியர்கள் உடனடியாக தீயை அணைத்தனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து ஆராய்ந்த போது, ரெயில் பெட்டியின் பேட்டரி சார்ஜ் செய்யும் டயனமோவி லிருந்து மின்கசிவு ஏற்பட்டு மின் ஒயர்கள் எரிந்தது தெரிய வந்தது.தீயை அணைத்தவுடன் ரெயிலில் வந்த பயணிகள் அனைவரையும் மின்சார ரெயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.

அத்துடன் ராமேஸ்வரம் ரெயிலை பல்லாவரம் ரெயில் நிலையத்தில் 4வது பிளாட்பாரத்தில் நிறுத்தி பழுது நீக்கும் பணியை ரெயில்வே ஊழியர்கள் செய்து வருகிறார்கள்.இந்த ராமேஸ்வரம் ரெயிலில் ஏற்பட்ட தீயை உடனடியாக பயணிகள் கண்டுபிடித்து அதிகாரி களுக்கு தகவல் தெரிவித்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

இச்சம்பவத்தால் ராமேஸ்வரம் ரெயிலுக்கு பின்னால் வந்து கொண்டிருந்த செங்கல்பட்டு கடற்கரை விரைவு மின்சார ரெயிலும், புதுச்சேரிசென்னை விரைவு ரெயிலும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டது.ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏற்பட்ட தீ விபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

No comments: