Sunday, December 14, 2008

சிமி-டெஹல்கா அறிக்கை - பாகம் 7


ஓர் உச்சநீதிமன்ற நீதிபதி பொய்த்திரை கிழித்த வேளையில் ...
ஆகஸ்ட் 5, 2008 அன்று முக்கிய அலைவரிசைகளில் இரவு 9 மணிச் செய்தி ஆரம்பித்தக் கொஞ்ச நேரம் கடந்த வேளையில், "இந்திய இஸ்லாமிய மாணவர் இயக்க(சிமி) அமைப்பின் மீது ஏற்படுத்தியிருந்தத் தடையினை உறுதி செய்வதற்குப் போதுமான ஆதாரங்கள் எதுவும் இல்லை" என்று கூறி தடையை விலக்கிக் கொண்டு டெல்லி உச்சநீதிமன்ற நீதிபதி கீதா மித்தல் அளித்தத் தீர்ப்பை மத்திய உள்துறை அமைச்சகம் மெதுவாக வெளியிட்டது.
ஊடகச் செய்திகளின்படி, நீதிபதி தனது தீர்ப்பினை முத்திரை பதித்த உறையில் வைத்து உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைத்துள்ளார். அவர் தனது தீர்ப்பினை நீதிமன்றத்தில் அறிவித்திருக்கச் சாத்தியமில்லை. ஏனெனில், தங்களுக்குச் சாதகமானதும் வரவேற்கத்தக்கதுமான தீர்ப்பினைச் சிமியின் முன்னாள் தலைவர் ஷாஹித் ஃபலாஹியின் வழக்கறிஞரே வானொலி அலைவரிசையின் செய்தியினூடாகத்தான் தெரிந்துக் கொண்டார்.
அதே நாள், அதாவது ஆகஸ்ட் 6 அன்று, நீதிமன்றத்தின் தடை நீக்கத் தீர்ப்பின் நகல் ஃபலாஹிக்கோ அவரின் வழக்கறிஞருக்கோ கொடுக்கப்படவில்லை. அரசுத் துணை வழக்கறிஞர் (அடிஷனல் சொலிசிட்டர் ஜெனரல்) கோபால் சுப்ரமணியம், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி கெ ஜி பாலகிருஷ்ணன் முன்னிலையில் அதனைச் சமர்ப்பித்து, சிமியின் மீதான நீதிபதி கீதா மித்தலின் தடை நீக்க உத்தரவை நிறுத்தி வைக்கக் கோரிக்கை விடுத்தார். உடனடியாகவே அதை அனுமதித்த உச்சநீதிமன்றம் சிமியின் மீதான தடை தொடரும் என அறிவித்தது.தார். உச்சநீதிமன்றம் சிமிக்கு நோட்டீஸ் அனுப்பியதோடு, தடை தொடர்வதற்கு எதிராக ஆதாரங்கள் ஏதும் இருப்பின் சமர்ப்பிப்பதற்குக் கோரிக்கையும் விடுத்தது.
"நீதிபதி கீதா மித்தல் தீர்ப்பாணையத்தின் உத்தரவினை ஒரே நாளில் தடை செய்த உச்சநீதி மன்றத்தின் நடவடிக்கை நீதியைக் கொலை செய்ததற்கு ஒப்பானதாகும்" என ஃபலாஹி கூறினார். இவ்விஷயத்தில், "உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பு சரியல்ல" எனக் கூற அவருக்குப் போதுமான காரணங்கள் இருக்கலாம். 1967இன் 'சட்டவிரோதச் செயல்பாடுகள் தடை சட்ட'ப்படி, சிமியைத் தடை செய்த முறைப்படி, ஓர் அமைப்பைத் தடை செய்த 30 நாட்களுக்குள் ஓர் அமர்வு உயர்நீதி மன்ற நீதிபதியைத் தீர்ப்பாணையத்தின் நீதிபதியாக நியமித்து, "தடை போதுமான ஆதாரங்களின் அடிப்படையில் செய்யப் பட்டதுதானா?" என்பதை ஆய்வு செய்ய வேண்டும். ஓர் இயக்கத்தைத் தடை செய்த 6 மாத கால அளவிற்குள் அது தொடர்பான தீர்மானத்தைத் தீர்ப்பாணையம் எடுக்க வேன்டும் என்றும் அதே சட்டம் கூறுகிறது. (சிமியை இறுதியாகத் தடை செய்தது 2008 பெப்ருவரி 7 என்பதால் தீர்ப்பாணைய நீதிபதி கீதா மித்தலின் உத்தரவு ஆகஸ்ட் 6 க்குள் வெளியிட வேண்டிய கட்டாயம் இருந்தது).
சிமி மீதான தடை நீக்க உத்தரவைத் தடை செய்யக் கோரி, மத்திய அரசு உச்சநிதிமன்றத்தை அணுகிய உடன், அதிவேகத்தில் அம்மனுவைப் பரிசீலித்து தடைபோட்ட அதே நீதிமன்றம் முன்னிலையில், மூன்று முறை தடையினை உறுதிப் படுத்தியதற்கு எதிராகச் சமர்பித்த சிமி சார்பான மனுக்கள் இதுவரை பரிசீலனைக்கு எடுக்கப்படவில்லை என்பதைக் காணலாம். சட்டப்படி, ஃபலாஹி சமர்ப்பித்த மனுக்களுக்கும் தற்பொழுது மத்திய அரசு சமர்ப்பித்த மனுவிற்கும் இடையில் யாதொரு வித்தியசமும் இல்லை. அது மட்டுமல்ல, மத்திய அரசும் சிமியும் நான்கு தீர்ப்பாணையங்களின் சட்டப் படியான பார்வையில் ஒரே தரத்தில் உள்ள இரண்டு கட்சிகள் மட்டுமேயாகும்.சிமி தடை நீக்க உத்தரவை நிறுத்துவதற்காக உச்சநீதிமன்றத்தை அணுகிய மத்திய அரசின் நடவடிக்கை, ஃபலாஹியின் சட்டரீதியான உரிமையையும் பறிக்கின்றது. நடைமுறைப்படி, ஒரு நீதிமன்றத்திலிருந்து தனக்கு அனுகூலமான தீர்ப்பினைப் பெற்ற ஒருவருக்கு, மேல்முறையீட்டை உள்ளடக்கிய அவ்விஷயத்தின் மீது "தனக்குத் தெரிவிக்காமல் உத்தரவுகள் பிறப்பிக்கக் கூடாது" எனக் கோரிக்கை வைத்து ஒரு கேவியட் மனு தாக்கல் செய்வதற்கான உரிமையுள்ளது. நீதிபதி கீதா மித்தலின் தீர்ப்பு, ஃபலாஹிக்கு அதிகாரப்பூர்வமாகக் கிடைக்கப் பெறாததால் நடைமுறைப்படி அதன் மீதான கோரிக்கை மனு பதிவு செய்யும் வாய்ப்பு அவருக்கு கிடைக்கவேயில்லை.கடந்த ஐந்து ஆண்டுகாலம் கடுமையான சட்டப் போராட்டம் நடத்திப் பெற்றத் தீர்ப்பை முறைப்படி சிமிக்கு வழங்காமல், தடை நீக்க உத்தரவை நிறுத்துவதற்காக நேரடியாக உச்சநீதிமன்றத்தை அணுகிய மத்திய அரசின் நடவடிக்கை மிகப் பெரும் வஞ்சனையாகும். "சிமி மீதான தடையினை நீக்கியதற்கு, ஆதாரங்களை கீதா மித்தல் சரியாக கவனிக்காததே காரணம்" என மத்திய உள்துறை அமைச்சகமும் அதனை பிரதிநிதித்துவப் படுத்தும் அரசு வழக்கறிஞரும் பொய் செதியைப் பரவ விட்டனர். உண்மையுடன் இத்தீர்ப்புக்கு எந்த ஒரு தொடர்பும் இல்லை எனவும் அவர்கள் கூறினர். இவ்வறிக்கையினத் தயார் செய்த பத்திரிக்கையாளர், கடந்த மூன்று மாதங்களாக ஒன்பது நகரங்களில் நடந்த தீர்ப்பாணைய அமர்வுகளில் கலந்துக் கொண்டிருந்தார். தாக்குப் பிடிக்காத வெறும் குற்றச்சாட்டுகள் அல்லாமல் உறுதியான எந்தவோர் ஆதாரத்தையும் விசாரணை நீதிமன்றத்தின் முன்னிலையில் சமர்ப்பிப்பதற்கு அரசினால் முடியவில்லை என்பதே உண்மையாகும். சிமியைத் தடை செய்து உத்தரவு பிறப்பித்த பெப்ருவரி 7 முதலே சட்டத்திற்கு உட்பட்ட பல கடமைகளும் விவகார நடவடிக்கைகளும் சாமான்ய நீதிகளும் எதுவுமே சரியான முறையில் கடைபிடிக்கப்படவில்லை என்பதைக் காணமுடிகின்றது.அரசுத் துணை வழக்கறிஞர் ஆகஸ்ட் 6 அன்று உச்சநீதிமன்றத்தை ஸ்டே உத்தரவிற்காக அணுக வேன்டிய நிலை ஏற்பட்டதற்கு, தீர்ப்பாணைய அமர்வுகளில் அரசு கடைபிடித்த நிலைபாட்டிற்குக் கிடைத்தத் தகுந்த பதிலடி என்பதை அறிந்து கொள்ளமுடியும். 1967 சட்டப்படி ஓர் இயக்கத்தைத் தடை செய்யும் பொழுது, அது குறித்து அரசின் கருத்தையும் அவ்வியக்கத்தைத் தடை செய்வதற்கு அரசுக்கு ஏற்பட்டக் கட்டாயச் சூழலையும் விவரிக்க வேண்டும். "சட்டவிரோதச் செயல்பாடுகளின் காரணத்தால் சிமி தடை செய்யப்பட வேண்டியதே" என்ற அரசின் நிலைபாட்டிற்குக் கொண்டு சென்றதற்கான காரணங்கள் எதுவுமே அதில் விவரிக்கப் பட்டிருக்கவில்லை என்பது வியப்புக்குரியதாகும்! . தீர்ப்பாணைய அமர்வுகளின் இறுதி நாட்களில் நீதிபதி கீதா மித்தல் மத்திய அரசின் வழக்கறிஞரிடம் இவ்விஷயத்தைச் சுட்டிக் காட்டியிருந்தார்.ஃபலாஹியின் இளம் வழக்கறிஞரான ஜவஹர் ராஜா சுறுசுறுப்புடன் மூன்று மாதக் காலம் எதிரிகளைக் கம்பி மீது நடக்க வைத்தார். "அரசின் தடை உத்தரவில் எந்தப் பிரிவு சிமியைத் தடை செய்வதற்கான காரணமாக எடுத்துக் கொள்ளப் பட்டது" என்பதை எழுத்துப் பூர்வமாக எழுதித் தர வேண்டும் என அரசிடம் ஜவஹர் ராஜா கோரிக்கை விடுத்தார். முதலில், "தடை உத்தரவில் உள்ள இறுதி நான்கு பத்திகளே சிமி தடை செய்யப்படுவதற்கான ஆதாரமாகக் கருதப்பட வேண்டியவை" என அரசு கூறியது. ஆனால், மூன்று மாதங்களுக்குப் பின்னர் ஜூன் 30 அன்று அரசு வழக்கறிஞர் ஜனரல் கெ. கெ. பதக் 2.2.2008 ல் சமர்ப்பித்தக் குற்றச்சாட்டு அறிக்கைக் குறிப்பில் உள்ள முதல் மூன்று பத்திகளே சிமியைத் தடை செய்வதற்குக் காரணங்களாக தீர்ப்பாணையத்தின் முன்னிலையில் கூறினார்.உச்சநீதிமன்றத்தில் அரசுத் துணை வழக்கறிஞர் சுப்ரமணியம் சமர்ப்பித்த மனுவிலும் இதே குளறுபடிகளைக் காணலாம். அது, எவ்வித ஆதாரங்களுடைய துணையும் இல்லாத ஒரு வெறும் அறிக்கையாக மட்டுமே இருந்தது. "இளைஞர்கள் மற்றும் மாணவர்களுடைய ஓர் இயக்கம் என்ற நிலையில், ஜம்மு-காஷ்மீரில் செயல்படும் தீவிரவாத இயக்கங்கள் சிமியை மிக எளிதில் அணுகுகின்றன. தங்களின் இலட்சியங்களைப் பூர்த்தி செய்ய ஹிஸ்புல் முஜாஹிதீனும் லஷ்கரே தொய்பாவும் சிமி இயக்கத்தினுள் வெற்றிகரமாக நுழைந்துள்ளன" என்ற குற்றச்சாட்டிற்கும் எந்த ஒரு காரணமோ ஆதாரமோ அதில் குறிப்பிடவில்லை."தடை நீக்க உத்தரவை நிறுத்த வேண்டும்" எனக் கோரி சமர்ப்பித்த மனுவில், தடை உத்தரவினைச் சுட்டிக் காட்டி, "சிமியின் சட்டவிரோதச் செயல்பாடுகளைத் தடை செய்யவில்லை எனில் அது தனது சட்டவிரோதச் செயல்பாடுகளைத் தொடரும் எனவும் தலைமறைவாக இருக்கும் அதன் உறுப்பினர்கள் தங்கள் செயல்பாடுகளை மீண்டும் ஆரம்பித்து, நாட்டின் மதசார்பற்ற நிலையைத் தகர்த்து, சமுதாயங்களிடையே வேற்றுமைகளை வளர்த்து, தேசவிரோதச் சிந்தனையை ஊக்குவித்து பிரிவினைவாதத்தை உயர்த்தி, தீவிரவாதத்துக்கு ஆதரவளிக்கும்" எனவும் அது கூறுகிறது. இக்குற்றச்சாட்டுகள் அனைத்துமே உறுதியான ஆதாரங்களின் அடிப்படையில் சமர்ப்பிக்கப் பட்டவை அல்ல; மாறாக, வெறும் சந்தேகங்கள் மட்டுமே ஆகும். பலவிதமான குற்றச்சாட்டுகள் சுமத்தி நாட்டின் பல பாகங்களிலிருந்துக் கைது செய்யப் பட்ட சிமி உறுப்பினர்களை ஒவ்வொருவராக நீதிமன்றங்கள் நிரபராதிகள் என விடுவித்து வருவதைக் காணலாம். நிச்சயமாக இன்றுவரை வெளியான தீர்ப்புகளில் மிக அதிகமானவையும் 'அதிபயங்கரமான குற்றச்சாட்டுகள்' சுமத்தப்பட்ட சிமி உறுப்பினர்களுக்குச் சாதமானதாகவே இருந்துள்ளன.இதில் மற்றொரு முக்கியமான கவனிக்கத் தக்க அம்சம் என்னவெனில் அடிப்படை நீதிகூட சிமிக்குப் புறக்கணிக்கப் படுகிறது. மத்திய அரசின் நிலைபாடுகள் காரணமாக, விசாரணையில் நேரடியாகத் தொடர்புடைய சாட்சிகளைக் குறுக்கு விசாரணைச் செய்ய எதிர்கட்சிக்கு(சிமிக்கு) முடியவில்லை. சிமி வழக்கறிஞர் ராஜாவின் வார்த்தைகளில் கூறினால், "என் கட்சிக்காரர் ஃபலாஹி, சிமிக்கு எதிராகச் சுமத்தப்பட்ட வழக்குகளின் உண்மைத் தன்மையின் மீது கேள்வி எழுப்பினார். இது நேரடியான சாட்சிகளின் மூலம் தெளிவிக்கப் படும்போதுதான் சரியான நீதி கிடைக்கும். இந்தியச் சட்டப்பிரிவுகள் கூறும் முறைப்படி நேரடியாக நீதிமன்றத்தில் சிமிக்கு எதிரான ஆதாரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்".சிமி உறுப்பினர்களுக்கு எதிராகப் பதிவு செய்யப் பட்ட பல விதமான குற்ற வழக்குகளில் விசாரணை நடத்திய அதிகாரிகளைத் தீர்ப்பாணையத்தின் முன்னிலையில் ஆஜராக்கி, கைது நடந்தச் சூழல், கைப்பற்றப் பட்டப் பொருட்கள், குற்ற ஒப்புதல் வாக்குமூலங்கள் முதலான பலவித விஷயங்களில் அவர்களைக் குறுக்கு விசாரணை நடத்துவதற்குச் சிமி வழக்கறிஞருக்கு சட்டப்படியான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்; அப்போதுதான் உண்மை வெளிச்சத்துக்கு வரும்.

இன்ஷா அல்லாஹ் தொடரும்...
_____________________________________________________________________
தேங்க்ஸ் டு :சத்தியமார்க்கம்
முந்தைய பகுதிகள்:
காவல்துறையும் அரசாங்கமும் ஷாஹித் பத்ர் ஃபலாஹிக்கு எதிராக... (சிமி-டெஹல்கா அறிக்கை பாகம்-6)
ஆதாரங்கள் உள்ளன; ஆனால் தரமாட்டோம்! (சிமி-டெஹல்கா அறிக்கை-பாகம்-5)
குற்றத்தை ஏற்றுக் கொள்ளும் (செல்லாத) ஒப்புதல் வாக்குமூலங்கள்! (சிமி-டெஹல்கா அறிக்கை-பாகம்-4)
உஸாமா பின் லாடன், அல்காயிதா, ஹமாஸ்! (சிமி-டெஹல்கா அறிக்கை-பாகம்-3)
"பொய்யைத் திரும்பத் திரும்பக் கூறு!" என்ற நாஸி தந்திரம்! (சிமி-டெஹல்கா அறிக்கை-பாகம்-2)
வாழ்க்கைகளைக் கசக்கி எறியும் வழக்குகள்! (சிமி-டெஹல்கா அறிக்கை-பாகம்-1)

No comments: