Wednesday, December 24, 2008

கேள்வியின் நாயகன்-அந்துலே!

சமீபத்தில்அனைத்து ஊடகங்களிலும் தலைப்புச் செய்தியாக ஆக்கப்பட்டிருக்றிர், திரு. அப்துல் ரகுமான் அந்துலே அவர்கள், மத்திய அரசில் சிறுபாண்மைத் துறை அமைச்சராக உள்ள அந்துலே அவர்கள் மும்பை தாக்குதலின்போது தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட சிறப்பு புலனாய்வு குழுத் தலைவர் ஹேமந்த் கார்கரேவின் மரணம் பற்றி கூறுகையில்,

ஹேமந்த் கார்கரே மலேகான் குண்டு வெடிப்பு சதி வழக்கின் புலனாய்வில் மிக முக்கிய பங்காற்றியதன் பின்னணியில் கொல்லப்பட்டுள்ளார். கொன்றவர்களை விட கொல்ல அனுப்பியவர்கள் யார்என்பதுதான் முக்கியமான கேள்வி என தன் சந்தேகத்தைப் பகிர்ந்துகொண்டார். நாடெங்கும் உள்ள ஜனநாயகவாதிகள் மனதிலும் இந்த கேள்வி இருந்து கொண்டுதான் இருக்கிறது. ஊடகங்கள் தொடர்ந்து லஷ்கர் இயக்கம், பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ ஆகியவைதான் மும்பை தாக்குதலுக்கு காரணமென்றும், இதற்கு பதிலடியாக பாகிஸ்தான் நாட்டின் மீதே இராணுவ தாக்குதலை தொடங்க வேண்டும் எனவும் பிரச்சாரம் செய்து வருகின்றன.
சில அரசியல் பார்வையாளர்கள் அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏ-தான் இத்தாக்குதலின் சூத்திரதாரியாக இருக்கக்கூடும் எனவும் கருதுகின்றனர். அப்படியான அனுமானங்களுக்கு அடிப்படை இல்லாமல் இல்லை.

இஸ்லாமிய பயங்கரவாதம் என்ற சொல்லாடலால் தன் ரத்த வெறி கொண்ட முகத்தை அமெரிக்கா திரை போட்டு மறைத்தே வைத்திருக்கிறது. தன் சந்தை நலனுக்காக உலகெங்கும் உள்ள வளரும் நாடுகளை தன் ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவந்து அந்த நாடுகளின் இயற்கை வளங்களை சுரண்டிக் கொழுக்க தன் ஆக்டோபஸ் கரங்களால் அந்நாடுகளின் குரல் வளையை நெறிக்கும் ஏகாதிபத்தியம்தான் அமெரிக்கா.

பெட்ரோலிய வளம் கொண்ட வளைகுடா நாடுகளில், கட்டுமான பணிகளுக்கு செல்கின்ற சாக்கில் ஒட்டு மொத்த வளைகுடா எண்ணெய் வளத்தையே தன் கைக்குள் கொண்டு வந்துள்ளது அமெரிக்கா.
முஸ்லிம்களை பயங்கரவாதிகளாக சித்தரித்துக் கொண்டே இன்னொரு பக்கம் அரபு நாடுகளை தன் அடிவருடிகளாக வைத்துள்ளது. உலகெங்கும் நடக்கிற மண்ணுக்கான போரினையும், அரசியல் அதிகாரத்திற்காக போராட்டத்தையும், ஆதிக்கத்திற்கு எதிரான, ஆக்கரமிப்புகளுக்கு எதிரான மக்கள் போராட்டங்களையும் மதச்சாயம் பூசி, மதவெறிப் போராட்டங்களாக சித்தரித்து, அதன் மூலம் மத அடிப்படைவாதிகளை வளர்த்து விடுகிறது.

மத அடிப்படைவாதிகளுக்கு ராணுவ பயிற்சியும், ஆயுதங்களையும் அளித்து கலகங்களை உருவாக்கிவிட்டு அந்த கலகங்களை அடக்க அந்நாட்டு அரசுகளுக்கும் ஆயுதங்களை விற்கிறது. கலகக்காரர்களும், கலகத்தை அடக்கும் அரசும் தங்களின் ஆயுத தேவைக்கு அமெரிக்காவையே சார்ந்திருக்க வேண்டிய நிலை.

அமெரிக்க ஆதரவாளர் ஈரான் மன்னர் ஷா-வை அதிரடிப் புரட்சியின் மூலம் அகற்றிவிட்டு கொமேனி ஈரான் ஆட்சி அதிகாரத்தினை கைப்பற்றினார். அமெரிக்காவின் சொத்துகளை முடக்கினார். உடனே ஈரானைத் தாக்க சதாம் உசேனை அமெரிக்கா ஏவிவிட்டது. இரசாயன ஆயுதங்கள் உட்பட ஏராளமான ஆயுதங்களை உலகத்தை பங்கு போடும் போட்டியில்இருந்த ரஷ்யா, அமெரிக்கா ஆகிய இரு ஏகாதிபத்தியர்களில் ஆப்கனிஸ்தானை ஆக்ரமிக்கும் முயற்சியில் ரஷ்யா வென்றது. மத்திய ஆசிய, நாடுகளின் கச்சா எண்ணெய் குழாய்களின் மூலமாக ஆப்கன், பாகிஸ்தான் வழியாக கொண்டு செல்ல ஆப்கானிஸ்தான் மண் தேவைப்பட்டது.
1979ஆம் ஆண்டு ரஷ்யா தன் கைப்பாவை நஜிபுல்லாவின் துணையுடன் ஆப்கனை ஆக்ரமித்தது. நாத்திகவாதிகளான ரஷ்ய கம்யூனிஸ்ட்களை விரட்ட, இஸ்லாமிய மத தீவிரவாதத்தை அமெரிக்கா திட்டமிட்டே வளர்த்தது. ஆப்கனில் முஜாஹிதீன்களும், தாலிபன்களும் அமெரிக்காவால், பாராட்டி சீராட்டி வளர்க்கப்பட்டனர். பல கோடி டாலர் பெருமான ஆயுதங்களை அமெரிக்கா வழங்கியது. இது போதாதென பின்லேடனின் அல்-கொய்தாவும் சவுதி அரேபியாவிலிருந்து ஆப்கனுக்கு வந்து முஜாஹிதீன்களுக்கும், தாலிபான்களுக்கும் பக்கபலமாக நின்றது.

ஆப்கன் மண்ணை ரஷ்ய ஆக்ரமிப்பிலிருந்து காப்பாற்றும் மக்களின் போராட்டம் திசை திருப்பப்பட்டு, மத வெறியூட்டப்பட்ட தாலிபான்களும், முஜாஹிதீன்களும் ரஷ்ய படைகளையும், அதன் பொம்மை அரசான, கைகூலி நஜிபுல்லாவின் படைகளையும் எதிர்த்து வீரப்போர் புரிந்தனர். 1989ல் ரஷ்யாவின் படை புறமுதுகிட்டு ஓடியது. ஆப்கனில் ரஷ்யாவிற்கும், அமெரிக்காவிற்கும் இடையிலான ஆக்ரமிப்பு யுத்தம்-நஜிபுல்லா அரசுக்கு எதிராக தாலிபான்களும், முஜாஹிதீன்களும் நடத்திய யுத்தமாக-உலகத்தின் பார்வைக்கு காட்டப்பட்டது.

ஆனால், அமெரிக்காவால் உருவாக்கப்பட்டு, ஊட்டி வளர்க்கப்பட்ட தாலிபன்களும், அல்-கொய்தாவும் வளைகுடாப் போரிலே அமெரிக்காவின் நரித்தனத்தை கண்டுகொண்டன. மேலும் தன் சொந்த மண்ணிலேயே அகதிகளாய் வாழும் பாலஸ்தீன மக்களின் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தும் இஸ்ரேல், அமெரிக்காவின் செல்லப் பிள்ளையாக இருப்பதும் தாலிபன்களுக்கும், அல்-கொய்தாவுக்கும் ஒப்புடையதாக இல்லை. எனவே, அமெரிக்கா இஸ்லாமிய நாடுகளுக்கு எதிரி என அறிவித்து அவை தாக்குதலில் இறங்கின.
தன்னாலே வளர்க்கப்பட்ட தாலிபன்களும், அல்-கொய்தாவும் தனக்கெதிராகவே திரும்பி இரட்டை கோபுரத்தை தாக்கியதும், தன் நரித்தனங்களையும், ஆயுத விற்பனைகளையும், வளைகுடா நாடுகளிடம் எண்ணெய் வளத்தை கொள்ளையடிப்பதையும் மூடி மறைக்கவும், தன் சந்தை நலனைக் காத்துக்கொள்ளவும் அமெரிக்கா "பயங்கரவாதம் என்ற சொல்லாடலை உருவாக்கி உலவவிட்டது. "பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்ற பெயரிலே ஆப்கனில் தாலிபான்கள் மற்றும் அல்-கொய்தாவையும், இதற்கு உலக நாடுகளின் எதிர்ப்பு கடுமையாக இருக்கவே தனக்கு ஆதரவாக தீவிரவாத தாக்குதல்களுக்கு ஆளாகும் இந்தியா போன்ற நாடுகளை தன் வலைக்குள் இழுக்க முயற்சிக்கிறது. இந்த பின்னனியில்தான் மும்பை தாக்குதலில் அமெரிக்க சி.ஐ.ஏ.வின் சதித்தனம் இருக்கலாம் என அரசியல் நோக்கர்கள் அனுமானிக்கின்றனர்.

அமெரிக்காவின் அடிவருடியாக பல பத்தாண்டு காலங்கள் இராணுவ ஆட்சியின் கீழ் இருந்த பாகிஸ்தான் சமீபமாகத்தான் பாராளுமன்ற ஜனநாயகப் பாதைக்கு திரும்பியுள்ளது. இதுவரை பாகிஸ்தானை ஆண்ட இராணுவ தளபதிகள், அமெரிக்காவின் கைக்கூலிகளாக, அடியாட்களாக வலம் வந்தனர்.

பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ என்பது பாராளுமன்ற அரசின் கட்டுப்பாடுகளுக்கு உட்படாத அமைப்பு. அமெரிக்க நலன் காக்கும் அரசு தொடர்ந்து இருப்பதை அது உறுதி செய்யும். முஜாஹிதீன்கள், லஷ்கர் போன்ற மத அடிப்படைவாத குழுக்களை உருவாக்கி, பயிற்சி அளித்து, ஆயுதங்களும் வழங்கி தம் அடியாட்களாக வைத்துள்ளது ஐ.எஸ்.ஐ. இதன் செயல்பாடுகளுக்கு மாறான எண்ணம் கொண்ட அரசியல் தலைவர்கள் படுகொலை செய்யப்படுவதும், 'மாண்டு போவதும் பாகிஸ்தானில் சகஜம். சமீபத்தில் நடந்த பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின்போது "நாங்கள்ஆட்சிக்கு வந்தால் தீவிரவாதிகளை இந்நாட்டிலிருந்தே ஒழித்திடுவோம் என முழக்கமிட்ட பெனாசிர் பூட்டோவும் இவர்கள் கையிலேதான் செத்துப் போனார். பாகிஸ்தான் அதிபரும், பிரதமரும் கூறுவதுபோல பாகிஸ்தான் இன்றளவும் பயங்கரவாதிகளின் களமாகவே உள்ளது.
கடந்த ஒன்றரை ஆண்டு காலத்தில் மட்டும் பாகிஸ்தானில் நடந்த நூற்றுக்கும் அதிகமான தற்கொலைப் படை தாக்குதல்களில் சுமார் 1200 பேர் இறந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தியாவைவிட அதிகமாக பயங்கரவாத தாக்குதல்களுக்கு உள்ளாகிறது பாகிஸ்தான். பாகிஸ்தான் கலவர பூமியாகவே இருக்கும் வரைதான் அமெரிக்காவின் ஆயுதங்கள் அங்கே விற்பனையாகும். அதற்காகவே, மத அடிப்படைவாத தீவிரவாதிகளை அமெரிக்கா ஆயுதங்களைக் கொடுத்து பாகிஸ்தானில் வளர்த்து வருகிறது.

இன்றைக்கு மும்பை தாக்குதல்களை நடத்தியவர்கள் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என அனைத்து ஊடகங்களும் பிரச்சாரம் செய்வதும், பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா போர் தொடுக்க வேண்டும் என்ற பொதுக் கருத்தை மக்களிடம் உருவாக்க முயல்வதும் இந்தியா, பாகிஸ்தான் இடையே ஒரு பதற்றமான நிலையை தொடர்ந்து இருக்க செய்வதற்கான மிகப்பெரிய சதி வலையின் கண்ணிகளே. இந்த பதற்றமான நிலை தொடர்வது அமெரிக்காவிற்கு பல வகைகளில் சாதகமானதாகும்.

முதலாவதாக "இஸ்லாமிய பயங்கரவாதம் என்ற சொல்லாடலை இந்தியாவில் நிலை நிறுத்தலாம். "பயங்கரவாத எதிர்ப்பு போர் என்ற அமெரிக்காவின் படுபாதகத்திற்கு ஆதரவு அணியிலே உலகின் மிகப்பெரிய, வல்லரசு நாடாக வரக்கூடிய இந்தியாவையும் இணைத்துக் கொள்ளலாம். மேலும் முக்கியமாக இந்தியா, பாகிஸ்தான் இடையே போரை மூளவைத்து விட்டால் அமெரிக்காவின் ஆயுத வியாபாரம் இரு நாடுகளுக்கும் கனஜோராக நடக்கும். இத்துணை சாதகங்கள் இருப்பதால்தான் மும்பை தாக்குதல்கள், பாகிஸ்தான் மத அடிப்படைவாத குழுக்கள் மூலம் அமெரிக்க உளவு அமைப்பால் நடைபெற்றிருக்கலாமோ என அரசியல் நோக்கர்கள் சந்தேகிக்கின்றனர்.
இந்தியாவில் இந்துத்துவா அடிப்படைவாதிகள், முஸ்லிம்களை இல்லாதொழித்து, அகண்ட பாரதம், இந்து ராஷ்டிரம் உருவாக்கும் களப்பணியிலே இருப்பவர்கள். பல கொலைக்களங்களை கண்டவர்கள். குஜராத் கல வரத்தில் 2500க்கும் அதிகமான முஸ்லிம்களை படுகொலை செய்ய ஏதுவாக கோத்ராவில் தாங்களே ரயிலை எரித்து 60பேரை களப்பலி தந்தவர்கள். இவர்களின் அமைப்பு அமெரிக்கா போன்ற வல்லாதிக்க நாடுகளில் இருந்து நிதி வசூலித்து அனுப்பி இந்திய திரு நாட்டை ரத்த பூமியாக்குவதை பல்வேறு ஊடகங்கள் வெளிப்படுத்திக்கொண்டுதான் இருக்கின்றன.

இஸ்ரேலின் இனவெறி 'மொசாத படையுடன் நெருக்கமான இந்த இந்துத்துவா அமைப்புகள், மொசாத்தின் அரசியல் குரு சி.ஐ.ஏவுடன், நெருக்கமாகவே உள்ளன. இந்தியாவில் "இஸ்லாமிய பயங்கரவாதம் எனும் கடைச்சரக்கை விற்க இந்த "சாவு வியாபாரிகள் ஒப்பந்தம் போட்டிருக்கலாம் என்றும் சில அரசியல் நோக்கர்கள் அச்சமடைந்துள்ளனர்.

"ஹேமந்த கார்கரேவை கொன்றது பாகிஸ்தானிலிருந்து வந்த பயங்கரவாதிகளாகவே இருக்கலாம் ஆனால் கொல்ல அனுப்பியது யார்?-என்ற அந்துலேவின் கேள்வி, இந்த நாட்டின் மீது பற்றுகொண்ட ஒவ்வொரு குடிமகனும், ஒவ்வொரு தேசபக்தனும், கேட்கின்ற கேள்வி.

-வழக்கறிஞர் வெ.ஜீவகிரிதரன்

No comments: