Wednesday, August 12, 2009

திண்டுக்கல்லில் 6, சென்னையில் 3 குழந்தைகள் பாதிப்பு-நெல்லை இளைஞருக்கும் அறிகுறி

சென்னை: திண்டுக்கல்லில் 6 பள்ளி மாணவர்களும் சென்னையில் 3 குழந்தைகளும் பன்றிக் காய்ச்சல் அறிகுறியுடன் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அதே போல மும்பையிலிருந்து நெல்லை வந்த வாலிபர் பன்றிக்காய்ச்சல் அறிகுறியுடன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சென்னை எழும்பூர் பாந்தியன் சாலையில் அரசு குழந்தைகள் நல மருத்துவமனைக்கு கடந்த 2 நாட்களில் ஒரு வயது, 3 வயது, 5 வயதுடைய 3 குழந்தைகள் காய்ச்சல், சளியுடன் சிகிச்சைக்காக வந்தனர்.

இது பன்றி காய்ச்சல் நோய் அறிகுறி என்பதால், அந்த 3 குழந்தைகள் ரத்த மாதிரி, சளி ஆகியவை எடுக்கப்பட்டு பரிசோதனைக்கான கிண்டியில் உள்ள கிங் இன்ஸ்டிடியூட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தொடர்ந்து, அந்த 3 குழந்தைகளுக்கும் தனி வார்டில் வைத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.

குழந்தைகளின் பெயர்களை வெளியிட டாக்டர்கள் மறுத்துவிட்டனர்.

3 குழந்தைகளுக்கும் பன்றி காய்ச்சல் நோய் உள்ளதா? என்பதை அறியும் பரிசோதனை முடிவு இன்று வெளிவருகிறது. அதன் அடிப்படையில்தான் பன்றி காய்ச்சல் உறுதி செய்யப்படும்.

திண்டுக்கல்லில் 6 மாணவர்களுக்கு பாதிப்பு:

திண்டுக்கல்லில் 6 பள்ளி மாணவர்கள் பன்றிக் காய்ச்சல் அறிகுறி காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அங்குள்ள டட்லி மேல்நிலைப்பள்ளியில் இவர்கள் படித்து வருகிறார்கள். அனைவரும் 11ம் வகுப்பு மாணவர்கள் ஆவர். கடந்த ஒரு வாரமாக இவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் இதுவரை குணம் ஏற்படவில்லை. இதையடுத்து அவர்களது ரத்த மாதிரி சோதனைக்கு அனுப்பபப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெல்லை இளைஞருக்கு பன்றிக் காய்ச்சல் அறிகுறி

இதற்கிடையே மும்பையிலிருந்து நெல்லை வந்த வாலிபர் பன்றிக்காய்ச்சல் அறிகுறியுடன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது சளி, ரத்தம் சென்னைக்கு ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது.

பாளையங்கோட்டை மனக்காவலன் பிள்ளை நகரை சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் பேச்சிமுத்து. மும்பையில் வேலை பார்த்து வந்த இவர் கடந்த ஒரு வாரத்திற்கு முன் ஊருக்கு வந்தார். பேச்சுமுத்துவுக்கு சளி, காய்ச்சல் இருந்து வந்தது.

இதையடுத்து அவர் நெல்லை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவருக்கு பன்றிக்காய்ச்சல் நோய்க்கான அறிகுறிகள் இருப்பதை கண்டறிந்தனர். இதை தொடர்ந்து அவரை தனி அறையில் வைத்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

பேச்சிமுத்துவின் ரத்தம் மற்றும் சளி மாதிரி எடுத்து சென்னை கிண்டியில் உள்ள கிங் இன்ஸ்டிடியூட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மருத்துவமனை டீன் கனகராஜ் கூறும்போது கடந்த ஒரு வாரமாக பேச்சிமுத்துவுக்கு சளி, காய்ச்சல் இருந்து வந்துள்ளது. இதனால் அவருக்கு பன்றிக்காய்ச்சல் இருக்கலாம் என்ற சந்தேகத்தில் தனி அறையில் வைத்து சிகிச்சை அளித்து வருகிறோம்.

சென்னைக்கு அனுப்பப்பட்டுள்ள சளி மாதிரியின் ரிசல்ட் வந்தால்தான் முடிவு தெரியும். பன்றிக்காய்ச்சலுக்கான மாத்திரைகள் இங்கு இல்லை. பன்றி காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டால் சென்னையில் இருந்து சுகாதார துறையினர் அதற்கான மருந்தை அனுப்பி வைப்பர்.

இருப்பினும் தேவையான மருந்து, மாத்திரைகளை பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

No comments: