Monday, August 17, 2009

டாக்கா: ரன்வேயில் சறுக்கிய ஜெட் ஏர்வேஸ் விமானம்-பயணிகள் தப்பினர்

டாக்கா: டாக்காவிலிருந்து டெல்லிக்குக் கிளம்பிய ஜெட் ஏர்வேஸ் விமானம் ரன்வேயில் சறுக்கியது. இருப்பினும் விமானத்தில் இருந்த 139 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை.

இன்று காலை 10.10 மணிக்கு டாக்காவில் உள்ள ஜியா சர்வதேச விமான நிலையத்திலிருந்து போயிங் 737 ரக ஜெட் ஏர்வேஸ் விமானம் 139 பயணிகள் மற்றும் ஊழியர்களுடன் டெல்லிக்குக் கிளம்பியது. டேக் ஆப் ஆகச் சில விநாடிகள் இருக்கும்போது, திடீரென மூன்று மீட்டர் தூரத்திற்கு விமானம் சறுக்கிச் சென்றது.

இதனால் விமான நிலையத்தில் பீதி ஏற்பட்டது. இருப்பினும் விமானத்தில் இருந்த 139 பேரும் காயமின்றி தப்பினர்.

உடனடியாக விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் இறக்கப்பட்டனர். விமானம் பரிசோதிக்கப்பட்ட பின்னர் கிளம்பிச் செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் காரணமாக டாக்கா விமான நிலையத்தில் அனைத்து உள்ளூர் மற்றும் வெளிநாட்டு விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டது. இச்சம்பவம் காரணமாக விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

சென்னையில் அவசரமாக தரையிறங்கிய விமானம்...

இன்று காலை சென்னையிலிருந்து டெல்லி நோக்கி புறப்பட்ட ஸ்பைஸ் ஜெட் விமானம் ஒன்று கிளம்பிய சிறிது நேரத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக மீண்டும் சென்னையில் அவசரமாக தரையிறங்கியது.

No comments: