Tuesday, August 11, 2009

காஷ்மீர் அரசுக்கு பெரும் சிக்கல்

ஜம்மு பகுதியை காஷ்மீர் மாநில அரசு தொடர்ந்து புறக்கணித்து வருகிறது என்று பல ஆண்டுகளாக ஜம்மு மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.


கடந்த 2006ம் ஆண்டு அப்போதைய முதல்வர் குலாம் நபி ஆசாத், ஜம்முவில் நடந்த கூட்டத்தில் பேசுகையில்,காஷ்மீரில் மத்திய பல்கலைக்கழகம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த பல்கலைக்கழகம் ஜம்முவில் அமைக்கப்படும், ஸ்ரீநகரில் இந்திய மேலாண்மை கல்வி நிறுவனம் அமைக்கப்படும் என்று தெரிவித்தார். இதனால், ஜம்மு மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். இதன்பிறகு ஆட்சிமாறியது.

மத்திய பல்கலைக்கழகம், தலைநகர் ஸ்ரீநகரில் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கு ஜம்மு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, டெல்லிக்கு சென்ற முதல்வர் உமர் அப்துல்லா, 2 மத்திய பல்கலைக்கழகங்கள் அமைக்க மத்திய அரசின் அனுமதியை பெற்றார். ஜம்முவில் ஒன்றும், ஸ்ரீநகரில் ஒன்றும் அமைக்கப்படும் என்று அறிவித்தார். இதையடுத்து சற்று அமைதி ஏற்பட்டது.

இந்த நிலையில், ஸ்ரீநகரில் மத்திய பல்கலைக்கழகத்தில் பணியாற்ற ஊழியர்கள் விண்ணப்பிக்க கேட்டு, நாளிதழ்களில் கடந்த 20 நாட்களுக்கு முன் விளம்பரம் வெளியானது. ஆனால், ஜம்முவில் தொடங்குவது பற்றி எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. இதையடுத்து ஜம்மு மக்கள் கோபம் அடைந்துள்ளனர்.

கடந்த 19 நாட்களாக ஜம்முவில் அரசுக்கு எதிராக மாணவர்கள் போராரட்டம் நடத்தி வருகின்றனர். இது பற்றி ஜம்மு மாணவர்கள் சங்க கூட்டமைப்பின் தலைவர் புபிந்தர் சிங் கூறுகையில், ஜம்முவை மாநில அரசு புறக்கணிப்பது புதிதல்ல,. ஜம்முவில் மத்திய பல்கலைக்கழகம் அமைப்பதில் அரசுக்கு சிறிதும் ஆர்வம் இல்லை.

மாணவர்கள் சங்க போராட்டத்தினால்தான், 2 பல்கலைக்கழகங்கள் தொடங்க முதல்வர் அனுமதி பெற்றார். ஆனால், அதை தொடங்குவதில் பாரபட்சம் காட்டுகிறார்.

ஜம்மு சம்பா பகுதியில் மத்திய பல்கலைக்கழகத்தை உடனே தொடங்க வேண்டும். அத்துடன், ஸ்ரீநகரில் இந்திய மேலாண்மை கல்வி நிறுவனம் தொடங்கினால், ஜம்முவிலும் தொடங்க வேண்டும்.

அதுவரை எங்கள் போராட்டம் தொடரும். போராட்டம் தீவிரமாகாமல் தடுக்க வேண்டியது அரசின் பொறுப்பு. இல்லாவிடில் கடந்த ஆண்டு அமர்நாத் விவகாரத்தில் நடந்த போராட்டம் போல் மிகப் பெரும் போராட்டமாக மாறும் என்பது உறுதி என்றார்.

No comments: