Wednesday, January 14, 2009

பிரதமருக்கு மிரட்டல் கடிதம் தமுமுக

பிரதமருக்கு மிரட்டல் கடிதம் தமுமுக நிர்வாகியை பொய் வழக்கில் சிக்க வைக்க காவல்துறை முயற்சி!


புதுவை யூனியன் பிரதேசம் காரைக்கால் - கடந்த 7ந்தேதி காலை, காவல்துறையின் நடவடிக்கையால் பதற்றத்திற்குள்ளானது.

அதிகாலையிலிருந்தே மஃப்டியில் காவல்துறையினர் ஆங்காங்கே நின்று கொண்டும், போலீஸ் ஜீப்கள் ஆங் காங்கே அலைந்து கொண்டுமிருக்க, சில காவலர்கள் எஸ்.ஏ.நகர் போன்ற இடங்களிலுள்ள வீடுகளில் தமுமுக மாவட்டச் செயலாளர் அப்துல் ரஹீமை கேட்டு விசாரித்துள்ளனர்.

இந்தத் தகவல் அப்துல் ரஹீமுக்கும் மாநில உலமா அணிச் செயலாளர்
எஸ்.பி.யூசுக்கும் மற்ற தமுமுக மாவட்ட நிர்வாகிகளுக்கும் தெரியவர அவர்களும் காவல்துறை அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு என்ன விஷயம்? என்று கேட்டபோது, ஒவ்வொரு அதிகாரியும் ஒவ்வொரு காரணத்தை கூறுகின்றனர்.

இது ஏதோ சதியில் சிக்க வைக்கும் திட்டமாக இருக்குமோ என விளங்கிக் கொண்ட நிர்வாகிகள் உடனே உளவுத் துறை மற்றும் காவல்துறை அதிகாரி களிடம் என்னவென்று கேட்க, அவர்கள் மழுப்பியதைத் தொடர்ந்து ஏதோ விபரீதம் என்பதை விளங்கிக் கொண்டு தமுமுக தலைமையைத் தொடர்பு கொண்டு விஷயத்தைச் சொல்கின்றனர்.

உடனே, தலைமையின் ஆலோ சனைப்படி ஒரு வழக்கறிஞருடன் அப்துர் ரஹீமை அழைத்துக் கொண்டு காவல் துறை கண்காணிப்பாளரிடம் நிர்வாகிகள் செல்ல, இதற்கிடையே செய்தி கேள்விப் பட்ட தமுமுகவினரும், பொது மக்களும் குவியத் தொடங்கினர். இதனால் அப்பகுதியே பதற்றமடைந்தது.

காரை மாவட்டக் காவல்துறை கண் காணிப்பாளர் பழனிவேலுவை உலமா அணிச்செயலாளர் யூசுப் எஸ்.பி. தலைமையில் தமுமுக மாவட்டத் தலை வர் லியாகத் அலி, மாவட்டப் பொருளாளர் ஷாஜகான், துணைச் செயலாளர் யூசுப் கான் ஆகியோர் சந்தித்து என்ன வென்று கேட்க, அவர், ‘எங்களுக்கே என்னவென்று தெரியவில்லை, தமிழகப் போலீஸ் ரஹீமை ஏதோ விசாரிக்க வேண்டும் எனக் கேட்கின்றனர். அனுப்பி வைத்தால் விசாரித்து விட்டு உடனே அனுப்பி விடுவார்கள்’ என்கிறார். ‘இதற்கு ஏன் இப்படி ஊரையே கலங் கடிக்க வேண்டும்? எங்களிடம் சொன் னால் நாங்களே அழைத்து வந்திருப் போமே?’ எனக் கேட்க, அதற்கு அவரிட மிருந்து எந்த பதிலும் இல்லை.


ஏதோ விசாரிக்க அழைத்துள்ளனர் அவ்வளவு தானே? மடியில் கனமில்லை அதனால் வழியில் பயமில்லை என்ற ரீதியில் அப்துல் ரஹீம் காவல்துறை விசாரணைக்காகச் செல்கின்றார்.. தமுமுகவினர் பின்தொடர்கின்றனர். ஆனால் நாகை காவல் கண்காணிப் பாளர் அன்றைய தினம் சென்னைக்கு வந்திருந்த பிரதமர் மன்மோகன் சிங்கின் பாதுகாப்பிற்காக சென்றுள்ளார். அவரது அலுவலகத்தில் அப்துல் ரஹீமை வைத்துக் கொண்டு இல்லை என்று சொன்னதால் சிறிது நேரம் அங்கும் பதற்றம் தொற்றிக் கொண்டது. நாகை மாவட்ட தமுமுக நிர்வாகிகள் மற்றும் நாகை நகர நிர்வாகிகளும் அங்கு குவியத் தொடங்கினர். “அலுவலகத் திற்குள் யாரும் நுழையக்கூடாது. வெளியே நில்லுங்கள்’’ என அங்கிருந்த காவலர்கள் நிர்வாகிகளைப்பார்த்துச் சொன்னதால் கூடுதல் பரபரப்பு ஏற்பட் டது. அதன்பிறகு அங்கு வந்த துணை கண்காணிப்பாளர் குணசேகரன் விசாரிக்கத் துவங்குகிறார். அப்போது தான் என்ன விசாரணை என்ற விபரமே நமக்குத் தெரிகிறது.


கடந்த வாரம் சென்னை வந்திருக்கும் பிரதமருக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து கூரியர் வந்திருப்பதாகவும் அது காரைக்காலிலிருந்து ஒரு டிராவல்ஸ் பெயரில் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அது சம்பந்தமான விசாரணை என்பதும் நமக்குத் தெரிய வரவே, இதில் ரஹீமை ஏன் சம்பந்தப்படுத்தினர்? எப்படி சம்பந்தப்படுத்தினர்? என தமுமுக நிர்வாகிகள் வினவினர்.


இங்கு விசாரித்ததில் அந்த மிரட்டல் கடிதத்திற்கும் தமுமுக அப்துல் ரஹீமுக் கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பது உறுதியாகிறது. வேண்டுமென்றே காரைக்கால் காவல்துறை கண்காணிப் பாளர் பழனிவேலு, போக்குவரத்துக் காவல்துறை உதவி ஆய்வாளர் மருத்தனி ஆகியோர் அப்துல் ரஹீமை சிக்க வைத் துள்ளனர், என்பதும் தெரிய வருகிறது.


சென்னை ஏர் இந்தியா நிறுவனத் திற்கு சென்ற கூரியரை தொடர்ந்து அது சம்பந்தமான விசாரணையை மேற்கொண்ட சென்னை போலீசார் அந்த கூரியர் காரைக்காலிலிருந்து அனுப்பப்பட்டிருப் பதால் அதுபற்றி விசாரிப்பதற்காகச் சென்னை எழும்பூர் உதவி ஆய்வாளர் பன்னீர் செல்வத்தை காரைக்கால் அனுப்பி வைக்கின்றனர். அவர் காரை மாவட்டக் கண்காணிப்பா ளரைச் சந்தித்துக் கேட்க, அது அனுப்பப்பட்ட தனியார் கூரியர் அலுவலகத்திற்குச் சென்று அங்கு கடிதப் பிரிவில் பதிவு செய்யும் பெண்ணிடம் விசா ரித்தபோது நாளொன்றுக்கு நூற்றுக்கணக்கானோர் வருகின்றனர். அதனால் தெரியாது என்கிறார். உடனே காரைக்கால் காவல்துறை ஆலோசனைக்கூட்டம் இரவு நடக்கிறது. அதில் யாரை யாவது ஒரு முஸ்லிம் நபரைப் பிடித்துக் கொடுத்து நமது வேலையை முடித்துக் கொள் வோம். யாரைப் பிடித்து கொடுக் கலாம்? என யோசித்து தமுமுக மாவட்டச் செயலாளர் அப்துல் ரஹீமை பிடித்து கொடுக்கலாம் என முடிவெடுக்கின்றனர். ஆனால் நியாயமான ஓரிரு காவலர்கள் இதனை மறுக்கவே அதனையும் மீறி எஸ்.பி. இப்படி முடிவெடுத்து விடுகிறார். தனியார் கூரியரில் தபால் பதிவு பிரிவி லிருந்த தனலெட்சுமி என்ற அந்தப் பெண்ணிடம் அப்துல் ரஹீமின் புகைப் படத்தைக் காட்டிய போலீசார் ‘இவர் தான் என சொல்’ என்று சொல்லு மாறு கேட்டுள்ளனர்.


அதற்கு அந்தப் பெண் மறுத்துள் ளார். ஆகவே காவல்துறை மாவட்டக் கண்காணிப்பாளர் ‘இவன்தான் என்று சொல். இல்லையேல் உன்னையே சிக்க வைப்போம்’ என மிரட்டியுள்ளார்.


இதற்கிடையில் அப்துர் ரஹீம் நாகை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத் திலிருந்து வெளிப்பாளையத்திலுள்ள ஆயுதப் படை பிரிவு அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்படுகிறார். அவரை பின் தொடர்ந்து தமுமுகவிரும் செல் கின்றனர். காரைக்கால் காவல்துறையும் நாகை காவல்துறையும் ஏதோ ஒரு பெரிய தீவிரவாதியைப் பிடித்துக் கொண்டு செல்வது போல பெரிய பில்ட்-அப் செய்தனர்.


இதனையடுத்து சென்னை காவல் துறை டீம் ஒன்று கொள்ளிடம் ஆணைக்காரன் சத்திரம் காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக வரவிருப்பதாகவும் ரஹீமை அங்கு அழைத்துச் செல்கிறோம் என்றும் கூறி டெம்போ டிராவலர் வாகனத்தில் ஏ.கே. 47 துப்பாக்கிகள் ஏந்திய எட்டு பேர்ப் பாதுகாப்போடு நாகூர் காவல்நிலைய ஆய்வாளர் கருணாநிதி தலைமையில் அழைத்துச் செல்லப்படுகிறார்.


இதற்கிடையே காரைக்கால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உயர் நீதிமன்ற நீதிபதி, ஆளுநர், முதல்வர், மனித உரிமை கமிஷன் என அனை வருக்கும் தந்தி அனுப்பப்படு கிறது.


காரைக்கால் வழியே சென்றால் பிரச்சனையாகும் என எண்ணிய காவல் துறை திட்டச்சேரி வழியாக அழைத்துச் செல்கின்றனர். அந்த வாகனத்தைப் பின் தொடர்ந்து மைதீன், நியாஜுதீன், ஜியாவுதீன், சிக்கந்தர் ஆகியோர் இரு சக்கர வாகனம் இரண்டில் பின்தொ டர்ந்து எங்கு அழைத்துச் செல்கின்றனர் என்ற தகவலைத் தந்த வண்ணமிருந் தனர். அந்த வாகனம் பேரளம் காவல் நிலையத்தில் நின்றதும் அங்கும் தமுமுக வினர் குவிகின்றனர்.


உடனே காவல்துறையினர் தயவு செய்து பின் தொடர்ந்து வராதீர்கள். இப்படிக் கூட்டம் போடாதீர்கள் என கூறுகின்றனர்.


யாரோ முகம் தெரியாத ஒருவருக்குப் பிரச்சனை என்றாலும் ஒன்று திரளும் தமுமுகவினர், தமுமுக மாவட்டச் செய லாளருக்குப் பிரச்சனை எனும்போது ஒன்றுசேர மாட்டார்களா? அப்படித்தான் பின்தொடர்வோம் எனக்கூறிய அவர்கள் கொட்டும் மழையிலும் பின் தொடர்ந்த வண்ணமிருந்தனர். இதற்கிடையே மாலை பத்திரிகைகளிலும் ஒரு சில தனியார் தொலைக்காட்சிகளிலும் பிரதமருக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த தமுமுக பிரமுகர் கைது என்ற செய்தி வெளியிடப்படுகிறது.


இச்செய்தியைப் பார்த்த, கேட்ட, படித்த தமிழகத்தின் பல பகுதிகளி லிருந்தும் தமுமுக நிர்வாகிகளைத் தொடர்பு கொண்டு என்ன? என்ன? எனக் கேட்டனர். அவர்களை அமைதி யாக இருக்குமாறு விசாரணையின் போக்கு எப்படி அமைகிறது என்பதைப் பார்த்துவிட்டு அதற்குப் பிறகு முடிவெடுப் போம் என்றும் கூறப்படுகிறது..


இந்நிலையில் ஆணைக்காரச் சத்திர காவல் நிலையத்திலிருந்து சிதம்பரம் காவல்நிலையம் அழைத்துச் செல்லப் படுகிறார். அவரைப் பின்தொடர்ந்து மாநில உலமா அணிச் செயலாளர் யூசுப் எஸ்.பி. தலைமையில் காரை மாவட்டப் பொருளாளர் ஷாஜஹான், துணைச் செயலாளர் யூசுப் கான், வர்த்தகர் அணிச் செயலாளர் காசிம் ராஜா, ரஹீமின் மாமா சாஹிர் ஆகியோர் சென்றனர்.


சிதம்பரம் காவல் நிலையத்தில் காத்திருந்த சென்னை காவல்துறை டீமிடம் அவரை ஒப்படைத்தனர்.


சென்னை டீம் பொறுப்பெடுத்தபின் காவல் கெடுபிடிகள் தளர்த்தப்பட்டன. சென்னை திருவல்லிக்கேணி ஆய்வாளர் முத்து வேலுபாண்டி தலைமையில் நான்கு காவலர்கள் மஃப்டியில் வந்திருந் தனர்.


நாகூர் காவல் ஆய்வாளர் கருணாநிதி சென்னை காவல் குழுவிடம் ‘என்ன - ஏ.கே.47 துப்பாக்கி எடுத்து வராமல் வந்திருக்கிறீர்கள்?’ எனக் கேட்க, ‘இவர் என்ன தீவிரவாதியா? சந்தேகத் தின் பேரில் விசாரணைக்காக அழைத் துச் செல்கிறோம். அவ்வளவுதான்’ எனக் கூறியபோது அது அவர்களது அனுபவ முதிர்ச்சியைக் காட்டியது.


கருணாநிதி, பழனிவேலு போன்ற வர்கள் இதனைப் பார்த்த பிறகாவது பாடம் (புத்தி) படிக்கட்டும்.


சென்னை காவல்துறை டீம் நீதி யுடனும், நடுநிலையுடனும் செயல்பட்டது பாராட்டுக்குரியது.


இரவு கடலூரில் தங்கி ஓய்வெடுத்து விட்டு மறுநாள் 8ந்தேதி பிரதமர் பங்கு கொண்ட நிகழ்ச்சி முடிந்தபின் பிரதமர் சென்னையை விட்டுக் கிளம்பிய பிறகு சென்னை அழைத்து வரப்பட்ட ரஹீமை எழும்பூர் எஃப்-2 காவல் நிலையத்தில் வைத்து உதவி ஆணையர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் விசாரிக்கின்றனர். நேரம் செல்லச் செல்ல இங்கும் தமுமுக வினர் குவியத் தொடங்கினர்.


அப்துல் ரஹீமிற்கும் பிரதமருக்கு அனுப்பப்பட்ட கடிதத்திற்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்பது விசாரணை யில் தெரிய வந்தவுடன் இது சம்பந்த மாக எப்போது அழைக்கப்பட்டாலும் வர வேண்டுமெனவும் உண்மைக் குற்ற வாளியைப் பிடிக்க ஒத்துழைப்புத் தாருங் கள் எனவும் கேட்டுக் கொண்டு அனுப்பி வைத்தனர்.


கைகுலுக்கி விடைபெற்ற அப்துல் ரஹீமை தமுமுக நிர்வாகிகள் அழைத்துச் சென்றனர், எல்லாப் புகழும் இறை வனுக்கே, தொடர்பு கொண்ட அனை வருக்கும் தகவல் தரப்பட்டது. தமுமுக தலைமையகத்திற்குச் சென்று தலைமை நிர்வாகிகளைச் சந்தித்த பின் மீண்டும் காரைக்கால் சென்றார் அப்துல் ரஹீம்.

சங்பரிவாரின் சதி!
‘பிரதமருக்கு மிரட்டல் கடிதம்’ சம்பந்தமான விசாரணையில் ரஹீம் இணைக்கப்பட்ட செய்தியை அறிந்த சங் பரிவாரங்கள் இதனை ஊதிப் பெரிதாக்கித் தங்களை வளர்த்துக் கொள்ளும் வாய்ப்பாக 12ந்தேதி காரைக்காலில் பேரணி மற்றும் பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய் துள்ளனர். இதற்குக் காவல்துறையும் உடந்தை. தமிழகத்திலிருந்து ஆட் களைக் கொண்டு வந்து கலவரம் விளைவித்து முஸ்லிம்களின் பொரு ளாதாரத்தைச் சூறையாடவும் திட்டம். நாகூரில் கலவரம் செய்த சங்பரி வாரங்களை வைத்துக் காரைக்காலி லும் கலவரம் விளைக்கத் திட்டம்? இதனை முறியடிக்க ‘முஸ்லிம் ஒருங் கிணைப்புக்குழு’ மாவட்டக் காவல் கண்காணிப்பாளரைச் சந்தித்து முறை யிட்டபோது வழமை போலவே அவர் சமாளித்து அனுப்பியுள்ளார். இந்து முன்னணி இராமகோபாலன் வருவ தாகவும் தகவல். அவர் மீது வாரண்ட் உள்ள நிலையில் எப்படி காரை வரு வார்? காவல்துறை என்ன செய்யப் போகிறது? கலவர நோக்கோடு பேரணி நடத்தபோகும் சங்பரிவார் ஏதேனும் கலவரம் விளைவித்தால் அதற்குக் காரைக்கால் காவல்துறை தான் பொறுப்பேற்க வேண்டும்.

ரஹீமை சிக்க வைப்பதற்கான காரணங்கள்
தமுமுக காரை மாவட்ட நிர்வாகம் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தைப் பயன்படுத்தி நிறைய விஷயங்களைச் சாதித்து வருகின்றது. அதிலும் குறிப்பாக வீட்டு மனைப் பட்டா வழங் காமல் இழுத்தடித்துப் பட்டாவிற்கு இவ்வளவு பணம் தந்தால்தான் தருவோம் எனக்கூறிக் கிட்டத்தட்ட 2000க்கும் மேற்பட்ட பட்டாக்கள் வழங்கப்படாமல் இருந்தன. இந் நிலையில் ஆர்.டி.ஏ. எனப்படும் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் மனு போட்டவுடன், ஒருவாரம் முழுவதும் இரவு பகலாக வேலை பார்த்து அவசர கதியில் 1500 பட்டாக்கள் வழங்கப் பட்டுவிட்டன. பெரிய அளவில் லஞ்சம் எதிர்பார்த்த அரசு அதிகாரிகள் தமுமுக வினர் மீது கடும் கோபம் கொண்டி ருந்தனர்.


காரைக்கால் காத்தாப்பிள்ளை கோடி சிக்னலில் இருந்த ஹோம் கார்டு ஒருவர் தமுமுக மாவட்டச் செயலாளர் ரஹீமை தரக்குறைவான வார்த்தை யால் திட்டிவிட, இதைக் கேள்விப்பட்ட தமுமுகவினர் சாலையில் அமர்ந்து சம்பந்தப்பட்ட ஹோம்கார்டு மீது நடவடிக்கை எடுக்கக் கோரினர். இதில் போக்குவரத்துக் காவல் உதவி ஆய்வாளர் மருத்தணி கடுப்பாகிப் போனார்.


டிசம்பர் 6 பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு முஸ்லிம்கள் ஆண்டுதோறும் தங்களது கண்டனத் தையும் எதிர்ப்பையும் காட்டி வருகின் றனர். இதைக் கெடுக்கும் விதமாகவும் தடுக்கும் விதமாகவும் காரைக்கால் காவல்துறை சங்பரிவாரத்தை தூண்டி விட்டு அவர்களையும் அதே தினத்தில் முஸ்லிம்களுக்கு எதிராகப் போராட்டம் நடத்த இவ்வருடம் அனுமதி வழங்கி னர். இதனைத் தட்டிக்கேட்டது தமுமுக உள்ளிட்ட முஸ்லிம் அமைப்புகள்.


முஸ்லிம்கள் மட்டுமே வசிக்கக் கூடிய பகுதிகளில் பிஜேபி அருள் முருகன் தலைமையில் கார் ஓட்டுனர் சங்கம் என்ற பெயரில் பலகை அமைத்து சங்பரிவாரத்தின் அட்டூழி யம் செய்ய முயன்றதற்குக் காவல் துறை அனுமதி வழங்கியது. இதனைத் தட்டிக்கேட்டனர் தமுமுகவினர்.


நேரு நகர் பள்ளிவாசலுக்காக வாங்கப்பட்ட இடத்தில் ஒரு பெயர்ப் பலகைக்கூட வைக்கவிடாமல் பி.ஜே.பி அருள்முருகன் உள்ளிட்ட சங்பரி வாரத்தினர் அட்டகாசம் செய்து வந்த னர். இதனை எதிர்த்துக் களமிறங் கியது தமுமுக.


நல்லம்பலில் நடைபெற்ற வரதட் சணை ஒழிப்புத் திருமணத்தில் கலந்து கொண்டதற்காகக் காரைக் கால் காவல்துறை கடந்த 1999ல் அணில் சுக்லா என்பவர் காவல்துறை கண்காணிப்பாளராக இருந்தபோது தமுமுகவினர் 10 பேர் மீது பொய் வழக்குப் போட்டனர். அவ்வழக்கு முடிவு தமுமுகவினருக்கு ஆதரவாக வந்தது. முகத்தில் கரி பூசிக் கொண்ட னர் காவல்துறையினர்.


சேத்தூரில் இறந்துபோன ஒருவ ரின் சடலத்தை அடக்க விடாமல் தடுத்தவர்களுக்கு எதிராக தமுமுக களமிறங்கியபோது எதிர்த்தவர் களுக்குச் சாதகமாக இன்றைய போக்குவரத்து ஆய்வாளர் மருத்தணி செயல்பட்டார். அவருக்கு எதிராக நின்ற தமுமுக இறுதியில் உடலை அடக்கம் செய்தது.


சேத்தூரில் பள்ளிவாசல் கட்ட விடாமல் சங்பரிவார் தடுத்தபோது தமுமுகவினர் எதிர்கொண்டு நின்ற னர். அதோடு மக்கள் நலப்பணிகள் பல செய்து வரும் தமுமுகவினருக்கு எதிராக சங்பரிவாரோடு கைகோர்த் துக் கொண்டு இன்றைய காவல்துறை கண்காணிப்பாளர் உள்ளிட்ட காவலர் கள் தங்களுடைய அரிப்பை இதன் மூலம் சொரிந்து கொள்ள நினைத்துள்ளனர்.

செய்தி ஊடகங்களின் இரட்டை நிலைகள்


பத்திரிகைகளிலும் தொலைக்காட்சிகளிலும் இந்தச் செய்தி பரபரப்பாக வெளியானதற்கு பி.ஜே.பியின் முக்கிய நபர் ஒருவரே காரணம். அவர்தான் அனைத்து செய்தியாளர்களுக்கும் போன் செய்து ரஹீமின் பெயர் மற்றும் முகவரிகளைத் தந்துள்ளார். அதே வேளையில் மறுநாள் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது மாநில உலமா அணிச் செயலாளர் யூசுப் எஸ்.பி செய்தி ஊடகங்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறிய மறுப்பை வெளியிடாமல் பார்த்துக் கொண்டது. இஸ்ரேலைக் கண்டித்ததை மட்டும் ஒளிபரப்பிய உள்ளூர்த் தொலைக்காட்சி காரைக்கால் காவல்துறையைக் கண்டித்த செய்தியை ஒளிபரப்பவில்லை


விசாரணை வளையத்தில்...

சென்னை போலீசாரின் விசார ணைக்கு தமுமுக நிர்வாகிகள் முழு ஒத்துழைப்புத் தந்து யாரையெல்லாம் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்ற பட்டியலையும் தந்துள்ளது.


பாரதப் பிரதமராக மன்மோகன் சிங்கோ சோனியாவோ வர வேண்டும் என்பதற்காக உயிரைக் கொடுத்து தேர்தல் பணியாற்றியவர்கள் தமுமுக வினர். தமுமுக சுனாமியின்போது பணியாற்றியதைக் கேள்விப்பட்டு குளச்சல் வந்த பிரதமர் மன்மோகன் சிங் பாராட்டிச் சான்றழித்தார்.


இட ஒதுக்கீடுக்காக டெல்லியில் பேரணி மற்றும் மாநாடு நடத்திய போதும் பாபரி மசூதி இடிக்கப்பட்ட தினமான டிசம்பர் 6ல் டெல்லியில் நடத்திய பேரணியின் முடிவிலும் பாரதப் பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்து தமுமுக தலைவர் மற்றும் நிர்வாகிகள் மனு அளித்தனர். இப்படி எப்போதும் நல்லுறவோடு உள்ள தமுமுகவினரை பிரதமருக்கு எதிரான விசாரணை வளையத்திற்குள் இழுத்து விட்டிருப்பது கண்டிக்கத்தக்கது.


இதே வேளையில் மன்மோகன் சிங் மற்றும் அவரது வகையறாக்கள் பிரதம ராக வந்துவிடக்கூடாது என்பதற்காக கங்கணம் கட்டி கொண்டிருந்தவர்கள், அவர் பிரதமராக வந்த பின்பும் அவரை கவிழ்த்து விட்டு குறுக்கு வழியில் எப்படியாவது பிரதமராக வந்து விட வேண்டும் என்பதற்காகச் செயல்படு பவர்கள். வாஜ்பாய், அத்வானி வகை யறாக்கள் ஏன் இந்த விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட வில்லை.


கடந்த ஆகஸ்ட் 15 சுதந்திர தினத் தன்று நல்லம்பல் சேத்தூர் பள்ளிவாசல் திறப்பு விழாவிற்கு பணியாற்றுவதற் காக தமுமுகவினர் சென்றிருந்தபோது திருபட்டினத்தில் ஒரு வீட்டில் தங்கி யிருந்த 4 இந்துத்துவ தீவிரவாதிகள் வெடிகுண்டுகளோடு பிடிபட்டனர். இந்தச் செய்தி வெளிவராமல் காரைக் கால் காவல்துறை மிகக்கவனமாகப் பார்த்துக் கொண்டது. அவர்களை ஏன் விசாரிக்கவில்லை. இதையெல்லாம் விட்டு விட்டு அப்பாவி முஸ்லிம்களில் யாரையாவது சிக்க வைக்கக் காவல் துறை முயற்சிப்பது கைவிடப்பட வேண்டும். காரைக்கால் திட்டச்சேரி, நாகூர் என விசாரணை வளையம் விரிவடைகிறது. உண்மை குற்றவாளி கண்டுபிடிக்கப்பட்டுத் தண்டிக்கப்பட வேண்டுமென்பதில் கருத்து வேறு பாடில்லை. ஆனால், குற்றவாளியைத் தப்பவிடும் வேலையைக் காவல்துறை கைவிட வேண்டுமென்பதே அனை வரின் எதிர்பார்ப்பாகும்.

ஒன்றுபட்ட ஜமாஃத்

பிரிந்து கிடந்த முஸ்லிம் சமுதாயம் பல பிரிவுகளாக, அமைப்புகளாக, இயக்கங்களாக, ஜமாஅத்களாக இருந்தது. ஆனால் பொதுவான ஒரு பிரச்சனை எனும்போது ஒன்றுபடுவது சுனாமி, பாபர் மசூதி, இட ஒதுக்கீடு போராட்ட நேரங்களில் நாம் கண்டு வந்த உண்மை. அதேபோல காரைக்கால் காவல்துறையின் இந்த மோசமான செயலால் மீண்டும் அனைவரும் ஒன்றுபட்டு ‘முஸ்லிம் ஒருங்கிணைப்புக் குழு’ என்ற ஓர் அமைப்பை ஏற்படுத்தி இனி எப்போதும் இந்த அமைப்பு அமைப்புச்சாராமல், அரசியல் சாராமல் சமுதாயப் பிரச்சனைகளின் போது ஒருங்கிணைந்து செயல்படுவோம் என்ற உறுதியோடு அல்லாக்குட்டி என்கிற அப்துல்லாஹ் அவர்களின் தலைமையில் அமைக்கப்பட்டுள்து.

வரவேற்பு பேரணி

விசாரணையிலிருந்து விடுவிக்கப்பட்டு அப்துல் ரஹீமை அழைத்து வரும்போது காரைக்கால் எல்லையான நண்டலாற்று பாலத்திலிருந்து நூற்றுக்கணக்கான இரு சக்கர வாகனங்கள் அணி வகுக்க வரவேற்பு அளிக்கப்பட்டது. 10 கி.மீ இவ்வாகன பேரணி சென்று சாலைகளின் இரு ஓரங்களிலும் நின்றிருந்த பொது மக்கள் பார்க்க அவரது வீடுவரைக் கொண்டு சென்று விட்டு வந்தனர். அவரது வீட்டினர் சந்தோஷக் களிப்பில் எதிர்கொண்டனர். ஒரு சகோதரனுக்கு ஒரு பிரச்சனை என்றால் அனைவரும் அணி திரள்வோம் என்ற பிரகடனத்தை இப்பேரணி கட்டியம் கூறியது.

பாராட்டுக்குரியவர்கள்

தமுமுக காரைக்கால் மாவட்ட தலைவர் லியாகத் அலி, மாவட்டப் பொருளாளர் ஷாஜகான், மாவட்ட துணைச் செயலாளர் யூசுப்கான், மாவட்ட துணைத் தலைவர் ஷேக் அலாவுதீன், மாவட்ட தொழிலாளர் அணி செயலாளர் மைதீன், மாவட்ட வர்த்தகர் அணி செயலாளர் காசிம் ராஜா மற்றும் நகர நிர்வாகிகள் ஜியாவுதீன், நஜீமுதீன், நியாஜுதீன், முன்னாள் மாவட்ட செயலாளர் ராஜா முகம்மது, திருப்பட்டினம், கருக்கங்குடி, திருநள்ளார், காரைக்கால் கிழக்கு கிளை நிர்வாகிகள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டது பாராட்டுக்குரியது.

No comments: