Monday, January 12, 2009

போகியை கைவிட்டால் சுற்று சூழல் பாதுகாக்கப்படும்


ஒவ்வொரு மதத்திற்கும் கொண்டாடக்கூடிய பண்டிகைகள் உண்டு. அதை யாரும் குறைகாண முடியாது. அதே நேரத்தில் அந்த பண்டிகைகள் அடுத்தவர்களுக்கு எவ்வகையிலும் பாதிப்பை உண்டாக்கும்வகையில் கொண்டாடப்படக்கூடாது. மனிதன் ஆரோக்கியமாக வாழ மூன்று அடிப்படையான விசயங்கள் தூய்மையானதாக இருக்கவேண்டும்.


அவை; நீர், நிலம், காற்று ஆகும். அந்த காலத்தில் வாழ்ந்த பெரிசுகள் இன்றைக்குள்ள ஆங்கில நோய்கள் ஏதும் தாக்காமல் இறக்கும்வரை ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள் எனில், மேற்கண்ட மூன்று விசயங்களில் அவர்கள் தூய்மையை கடைபிடித்தார்கள். ஆனால் நாகரிகத்தின் உச்சத்திற்கு சென்ற நாம் நீரை ரசாயன கழிவுகள் மூலமும், நிலத்தை பிளாஸ்டிக் கழிவுகள் மூலமும், காற்றை வாகன புகைகள், பட்டாசு கொளுத்துதல், போகி கொளுத்துதல் ஆகியவற்றின் மூலமும் மாசுபடுத்தி வருகிறோம்.


வரவுள்ள போகியன்று ' பழையன கழிதலும் - புதியன புகுதலும்' என்ற தத்துவத்தை முன்வைத்து வீட்டில் உள்ள பழைய பொருட்கள் மட்டுமன்றி, வாகன டயர்களை கொளுத்துவதன் மூலம் காற்று பெருமளவு மாசுபடுகிறது. இதுபற்றிய விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மாசு கட்டுப்பாடு வாரியம் மூலமாகவும், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலமாகவும் செய்யப்பட்டாலும் போகி கொளுத்துவோர் குறைந்தபாடில்லை.


பழையதை கழிப்பதுதான் போகியின் நோக்கமெனில், அந்த பழையது கூட தேவையுள்ள நிலையில் நம்நாட்டில் எத்தனையோ பேர் உள்ளனர்.' சாமி' படத்தில் பழைய துணிகளை கொளுத்தவந்தவரிடம் இருந்து அதை பெற்று ஏழை சிறுவர்களுக்கு வழங்குவார் விவேக்.படத்தில் மட்டுமல்ல.நிஜத்திலும் நாம் தூக்கிவீசும் எத்தனையோ பொருட்கள் தேவையுடையோர் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். எனவே அவர்களை கண்டறிந்து நமக்கு அவசியமில்லாத பொருட்களை வழங்கினால் அவர்கள் சந்தோஷப்படுவர். அல்லது அதற்கு சம்பிரதாயம் இடம்கொடுக்காது எனில், பழைய பொருட்களை கொளுத்தாமல் குப்பைத்தொட்டியிலாவது போடலாம். இதன்மூலம் காற்று மாசுபடாமல் தடுக்கப்படும்.

போகி கொண்டாடுபவர்கள் இந்த கருத்தை மதக்கன்னோட்டத்தோடு பார்க்காமல், சமூக அக்கறையோடு சிந்தித்து போகியை கைவிட்டால் சுற்று சூழல் பாதுகாக்கப்படும். நாமும் ஆரோக்கியமாக வாழலாம்.
thanks to : நிழல்களும் நிஜங்களும்

No comments: